ETV Bharat / state

கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்த ஓட்டுநருக்கு பணியிட மாற்றம் அறிவிப்பு!

author img

By

Published : Aug 17, 2023, 4:42 PM IST

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்த ஓட்டுநர் கண்ணனுக்கு அவர் சொந்த ஊரிலே பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

job transfer
கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்த ஓட்டுநருக்கு பணியிட மாற்றம் அறிவிப்பு

கோயம்புத்தூர்: தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கோவை மாவட்டம் சார்பில், சுங்கம் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் பணிக் காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி வழங்குதல், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு நிகழ்ச்சி, கோவை மாவட்ட பணிமனை அளவில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு 27 பேருக்கு வாரிசு பணி ஆணை, மருதமலை, சுங்கம் 1, சுங்கம் 2 ஆகிய மூன்று கிளைகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வறை, 50க்கும் மேற்பட்ட பணியாளர்களின் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் மேடைக்கு ஆறு மாத குழந்தையுடன் வந்த அரசு பேருந்து ஓட்டுநர் கண்ணன் என்பவர், தனது குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்து பணியிட மாறுதல் தொடர்பாக கோரிக்கை விடுத்தார்.

மேலும், கைக்குழந்தையுடன் ஓட்டுநர், அமைச்சரின் காலில் விழுந்த நிகழ்வு மேடையில் இருந்த அனைத்து அரசு அதிகாரிகள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. மேலும் அமைச்சர், தனது பிரச்னை குறித்து பேசி தீர்வு காணப்படும் என தெரிவித்ததாகவும் கண்ணன் கூறினார்.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 17) கோரிக்கை மனு பரிசீலிக்கப்பட்டு அவருக்கு அவரது சொந்த ஊரிலே பணியிட மாறுதல் வழங்கப்பட்டு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கண்ணன் நாளை பெற்று கொள்கிறார்.

இது குறித்து கண்ணன் கூறுகையில், தனது சொந்த ஊர் தேனி என்றும், தனக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தார்.

எனவே, எனது இரண்டு பெண் குழந்தைகளையும் தனது தாய், தந்தையார்தான் பார்த்துக் கொள்வதாகவும், தனது பெற்றோர்களுக்கும் வயது காரணமாக குழந்தைகளைப் பார்த்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதால் சொந்த ஊரிலிருந்து கோவைக்கு அழைத்து வர இயலாத சூழல் உள்ளது. எனவே, தனக்கு சொந்த ஊருக்கே பணி மாறுதல் வேண்டியும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

இது குறித்து பலமுறை பொது மேலாளரிடம் பணி மாறுதல் தொடர்பாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் அமைச்சரை நேரில் பார்த்து குழந்தையுடன் கோரிக்கை வைத்ததாக கூறினார்.

இதையும் படிங்க:மரம் ஏறி அட்டகாசம்... வாகன ஓட்டியை மிதிப்பேன் என மிரட்டும் யானையின் வீடியோ வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.