ETV Bharat / state

"சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அரசுக்கு ஈஷா கோரிக்கை

author img

By

Published : Jan 11, 2023, 1:12 PM IST

கோவை சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறாக செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ஈஷா யோகா மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

Isha
Isha

கோவை மாவட்டத்தில், கடந்த டிசம்பர் மாதம் ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் மாயமானார். இதுதொடர்பாக சுபஶ்ரீயின் கணவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, செம்மேடு பகுதியில் கிணற்றிலிருந்து சுபஶ்ரீயை சடலமாக மீட்டனர். பயிற்சி முடித்து வெள்ளை நிற ஆடையில் ஈஷா மையத்திலிருந்து சுபஶ்ரீ தலைதெறிக்க ஓடிவந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து ஈஷா யோகா மையத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. பல்வேறு அமைப்பினர் போராட்டங்களையும் மேற்கொண்டனர். இந்த நிலையில் சுபஸ்ரீயின் மரணம் குறித்து அவதூறு செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈஷா யோகா மையம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஈஷா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுபஶ்ரீயின் அகால மரணம் துரதிஷ்டவசமானது. யாரும் எதிர்பாராத இத்துயர சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எவ்வித கருத்தும் வெளியிடக் கூடாது என்பதற்காக இத்தனை நாட்கள் அமைதி காத்தோம். சுபஸ்ரீ வழக்கு விசாரணைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் காவல்துறைக்கு முறையாக வழங்கி உள்ளோம்.

ஊடக முகமூடிகளை அணிந்து கொண்ட சில யூடியூபர்கள், புலனாய்வு என்ற பெயரில் மர்ம நாவல்கள் எழுதும் திறன் படைத்த ஊடக எழுத்தாளர்கள், மக்கள் ஆதரவு இல்லாத சில உதிரி அமைப்புகள் இதனை தங்கள் சுய லாபத்திற்காக அரசியலாக்க முயற்சித்து வருகின்றனர். இவ்வழக்கு குறித்த வதந்திகள் மற்றும் அவதூறுகளை சில இயக்கங்களும், ஊடகங்களும் உள்நோக்கத்தோடு செய்திகளாக வெளியிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வன்மமான அவதூறுகள் மூலம் மக்கள் மத்தியில் குழப்பத்தை பரப்பும் நபர்கள், இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விழிப்புணர்வான உலகத்தை உருவாக்கும் எங்கள் நோக்கத்தையும், உறுதியையும் எவராலும் களைத்துவிட முடியாது" என்று குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈஷா யோகா மையத்தை மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் - சிபிஐ அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.