ETV Bharat / state

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர் திருவிழா - குடிநீர் வழங்கிய இஸ்லாமியர்கள்

author img

By

Published : Mar 1, 2023, 7:44 PM IST

கோவையின் புகழ்பெற்ற கோயிலான கோனியம்மன் கோயிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

guardian deity of Coimbatore Koniamman Temple Chariot Festival
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர் திருவிழா

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர் திருவிழா

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மனை தரிசனம் செய்தால் நினைத்தவை நிறைவேறும் என்பது ஐதீகம். நூற்றாண்டுகளுக்கு முன்பு கோவையை ஆண்ட கோவன் என்ற அரசனும், இளங்கோசரும் கோயில் கட்டி வழிபாடு செய்த அம்மன், கோனியம்மன்.

பல வரலாற்றுச் சிறப்புகள் மிக்க இந்த கோனியம்மன் தேர் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த கோயில் திருவிழாவை ஒட்டி பல்வேறு ஊர்களிலும் உள்ள மக்கள் கோவையில் திரண்டு தேர் திருவிழாவில் பங்கேற்பர். அந்த வகையில் இந்த ஆண்டு தேர் திருவிழாவில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேர்முட்டி வீதி எனக் கூறப்படும் தேர்நிலைத் திடலில் தொடங்கிய தேரோட்டம் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியா வீதி வழியாக மீண்டும் தேர் நிலை திடலை அடைந்தது. தேர் ஊர்வலமாக வந்தபோது செண்டை மேளங்கள் முழங்க இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடினர்.

கோயில் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தபோது பிரபல முன்னணி வணிக வளாகங்கள் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தேர் வீதி உலா வந்தபோது, பக்தர்கள் தேர் மீது உப்பு வீசினர். இவ்வாறு செய்தால் வேண்டிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

தேர் ஒப்பணக்கார வீதி பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற மசூதி அருகே வந்தபோது மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் பக்தர்கள் அனைவருக்கும் இஸ்லாமியர்கள் தரப்பில் குடிநீர் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு வழங்கி வருவதாகவும்; சுமார் 10,000 பாட்டில்கள் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் ஜமாத் நிர்வாகி தெரிவித்தார். தேர் ஊர்வலம் ஒவ்வொரு வீதியையும் வந்து அடையும்போதும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணமே இருந்தது. கோனியம்மன் தான் ஊரைக் காக்கும் தெய்வம், இவர்களை காண ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் வந்து விடுவோம் என உணர்ச்சி பொங்க தெரிவித்தனர்.

தேர்த் திருவிழாவை முன்னிட்டு கோவையின் முக்கிய வீதிகள் வழியே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கனரக வாகனங்கள் எதுவும் தேர் வீதி உலா வரும் சாலைகளிலும் இணைப்பு சாலைகளிலும் அனுமதிக்கப்படவில்லை. கோயில் திருவிழாவை முன்னிட்டு சுமார் 1,500 காவல்துறையினர் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு உடல் நலக்குறைவு - மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.