ETV Bharat / state

கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழ்நாட்டில் எல்லையில் சோதனை தீவிரம்

author img

By

Published : Dec 17, 2021, 7:00 AM IST

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதால் அங்கிருந்து இறைச்சி கோழி, தீவனம், முட்டை உள்ளிட்டவற்றை தமிழ்நாட்டிற்குள் கொண்டு செல்ல தற்காலிகமாக அனுமதி இல்லை எனக் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு

கோயம்புத்தூர்: கேரள மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாகக் கோழி, வாத்து போன்றவை இறந்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் தொற்று பரவாமல் இருக்க எல்லையோர மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு பணியில் கால் நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (டிச.16) பிற்பகல் வாளையார் சோதனை சாவடியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன், ஆய்வு மேற்கொண்டார்.

ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு

பின்னர் பேட்டியளித்த அவர், "கேரளாவில் ஒரு சில மாவட்டங்களில் பறவை காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டு இருப்பதால் கோவை மாவட்டத்தில் 11 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கேரளாவில் இருந்து கோழி இறைச்சி, தீவனம், முட்டை போன்றவை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வர தற்காலிகமாக அனுமதி இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், பறவை காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களுக்கு தெரிவிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கோவை மாவட்டத்தில் பறவை காய்ச்சல் அறிகுறி இல்லை என தெரிவித்த அவர், கேரள எல்லையின் அருகில் இருக்கும் மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கேரளாவில் ஒமிக்ரான் பாதிப்பு ஒரு சிலருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை எனவும், மாநில அரசின் உத்தரவுப் படி மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். கேரளாவில் இருந்து வருபவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், அவர் அறிவுறுத்தினார்.

ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு

இரு மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் முதல் டோஸ் 93.4 விழுக்காட்டினரும், இரண்டாவது டோஸ் 63 விழுக்காட்டினரும் போட்டுள்ளதாகவும், இது விரைவில் 80 விழுக்காடாக உயரும் என்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேகமாகப் பரவும் ஒமைக்ரான்... தமிழ்நாட்டில் ஒன்பது பேருக்கு பாதிப்பு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.