ETV Bharat / state

தூர்வார அரசு நிதி வழங்கவில்லை: விவசாயிகள் வேதனை

author img

By

Published : Aug 3, 2021, 8:25 AM IST

கோவை: பிஏபி திட்டத்தில் உள்ள பாசன கால்வாய்களை தூர்வார அரசு நிதி வழங்கவில்லை என மூன்று மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆழியாறு
ஆழியாறு

பரம்பிக்குளம் -ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து 50 ஆயிரம் ஏக்கரும், திருமூர்த்தி அணையில் இருந்து 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திருமூர்த்தி அணையில் இருந்து வரும் 3ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உள்ளது.

தண்ணீர் திறப்பிற்கு முன்பாக கால்வாய்களை தூர்வார நிதி ஒதுக்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர் அதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை.

பிஏபி திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் கிடைத்துவருகிறது. ஆதலால் கால்வாய்கள் புதர் மண்டி மற்றும் குப்பைகளாக காட்சியளிக்கின்றன.

இதனால், தண்ணீர் திறந்தாலும் கடைமடைவரை தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. இதையடுத்து, கால்வாய்களை தூர்வார விவசாயிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை அடுத்து அரசு தரப்பில் பிஏபி அலுவலர்களிடம் தூர்வார தேவையான நிதி அளவு எவ்வளவு என்பது பற்றி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு அலுவலர்கள் தரப்பில் சுமார் ரூ. 7 கோடி ரூபாய் தேவைப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

நிதிக்கு வாய்ப்பில்லை

இந்நிலையில், பிஏபி திட்டத்தில் உள்ள கால்வாய்களை தூர்வார நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என்று நிதித்துறை மறுத்துவிட்டதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கும் தண்ணீரையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கால்வாய்களை தூர்வார கோரிக்கை வைத்து திருமூர்த்தி அணையில் உள்ள 134 பாசன சபை தலைவர்களும், ஆழியாரில் உள்ள 16 பாசன சபை தலைவர்களும் தனித்தனியாக கோரிக்கை மனுவும் அரசுக்கு அனுப்பியிருந்தனர். திருமூர்த்தி அணையிலிருந்து நான்காவது மண்டல மற்றும் முதலாவது மண்டலத்தில் பயன்பெறும் இரண்டு லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் கால்வாய்களையும், ஆழியாறு அணையிலிருந்து பாசன வசதி பெறும் கால்வாய்களையும் தூர்வார கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் நிதி கிடைக்கவில்லை.

இதுகுறித்து பொள்ளாச்சி எம்எல்ஏ ஜெயராமன் கூறுகையில், ”கடந்த காலங்களில் குடிமராமத்து திட்டத்தில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. தற்போது தண்ணீர் திறப்பிற்கு முன்பு கால்வாய்கள் தூர்வாரப்பட்டிருக்கவேண்டும். ஆனால், தூர்வாராமல் இருப்பது விவசாயிகள் மீது அரசு மெத்தனபோக்குடன் செயல்படுவதை காட்டுகிறது” என்றார்.

பிஏபி திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவமிடம் கேட்டபோது, ”பிஏபி திட்டத்தில் நான்காவது மண்டலத்தில் ஒரு லட்சம் ஏக்கரும், அடுத்தபடியாக முதலாவது மண்டலத்தில் ஒரு லட்சம் ஏக்கரும் பயன்பெறும். பாசன கால்வாய்கள் தூர்வாரப்படாமல் புதர் மண்டியிருக்கிறது. தண்ணீர் திறந்தாலும் கடைமடைவரை தண்ணீர் செல்லாது.

ஆகவே கால்வாய்களை தூர விவசாயிகள் தரப்பில் செய்தித்துறை அமைச்சர், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் மற்றும் அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். இதையடுத்து, நீர்வளத்துறை அமைச்சகம் சார்பாக பொதுப்பணித் துறையிடம் கால்வாய்களை தூர்வார நிதி எவ்வளவு தேவைப்படும் என்று கேட்டிருந்தனர்.

இவர்களும் ரூ. 7 கோடி நிதி தேவை என பதில் அளித்திருந்தனர். ஆனால் நிதித்துறை நிதி வழங்க மறுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து மீண்டும் நீர்வளத் துறை அமைச்சரின் தனி உதவியாளர், செய்தித்துறை அமைச்சர் ஆகியோரிடம் பேசியுள்ளோம். நிதி மறுக்கப்பட்டுள்ள தகவல் வேதனை அளிக்கிறது” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.