ETV Bharat / state

நிதி நிறுவன இயக்குநரிடம் பணம் பறித்த புகார்..! முன்னாள் ஐ.ஜி., சிபிஐ கோர்டில் ஆஜர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 1:22 PM IST

முன்னாள் மேற்கு மண்டல ஐ.ஜி., பிரமோத் குமார் மீதான சிபிஐ-யின் லஞ்ச வழக்கில் 10 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த 'குற்றச்சாட்டு பதிவு' இன்று கோவையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

EX West Zone IG Pramod Kumar appeared in Coimbatore CBI court for Paazee Institutional litigation
முன்னாள் ஐஜி நீதிமன்றத்தில் ஆஜர்

கோயம்புத்தூர்: திருப்பூரில் 930 கோடி ரூபாய் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில், அந்நிறுவனத்தின் பெண் இயக்குநரை கடத்தி ரூ.2.5 கோடி லஞ்சமாக பணம் பறித்ததாக, அப்போது மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாருக்கு எதிராக சிபிஐ கடந்த 2011ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

2013ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார், அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், இடைத்தரகர்களான திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் பிரபாகரன் என்கிற அண்ணாச்சி, திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்கிற தரணி செந்தில்குமார் ஆகிய 5 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 10 ஆண்டுகளாகியும், 'குற்றச்சாட்டு பதிவு' நடைமுறை செய்யப்படாததால் வழக்கு நிலுவையில் இருந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த நவம்பர் 4ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையை தொடங்க வேண்டும் எனவும், அடுத்தாண்டு ஜூலைக்குள் வழக்கை முடிக்கவும், அதற்கு முன்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் குற்றசாட்டு பதிவு செய்ய வேண்டும் எனவும் கோவை சிபிஐ நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, 2 முறை குற்றச்சாட்டு பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டும், ஐ.ஜி., பிரமோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றச்சாட்டு பதிவுக்கு ஆஜராக கோவை சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஐ.ஜி., பிரமோத் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், வழக்கு தொடர்பாக கோவை சிபிஐ நீதிமன்றம் அழைப்பதற்கு எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டது.

இதையடுத்து, சிபிஐ பதிவு செய்துள்ள லஞ்ச வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஐ.ஜி., பிரமோத் குமார் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், குற்றச்சாட்டு பதிவுக்கு இன்றைய தினம் ஆஜாராகவும் கோவை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆஜராகவில்லையெனில் வாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி இன்று அவர் ஆஜரானார். ஐ.ஜி., பிரமோத் குமார் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் மதியம் விசாரணைக்கு வருவதால் வழக்கு மதியம் வரை ஒத்திவைத்து கோவை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு; முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் விசாரணைக்கு ஆஜர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.