ETV Bharat / state

கோவையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் - கனிமங்கள் கொள்ளை எனப் புகார்!

author img

By

Published : Dec 30, 2022, 5:29 PM IST

கோவையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டு அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் - கனிமங்கள் கொள்ளயடிப்பதாக புகார்!
கோவையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் - கனிமங்கள் கொள்ளயடிப்பதாக புகார்!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம், இன்று (டிச.30) நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். இதனையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ’கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் கல்குவாரிகள் மூலம் அண்டை மாநிலங்களுக்கு ஜல்லி கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் போன்றவைகள் கொண்டு செல்லப்படுகின்றன.

அரசு அனுமதி வழங்கிய 2 யூனிட்டுக்குப் பதிலாக 12 யூனிட் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பொருட்கள் கடத்தி கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அரசுக்கு, மாதம் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கனிமவளத்துறை கவனிக்காமல் உள்ளதால், இந்த தவறு நடப்பதாக கருத முடிகிறது.

வருவாய்த்துறை, காவல் துறை அலுவலர்கள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பயன்படாத கல்குவாரிகளில் மழைநீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் கனிமவளத்துறை அனுமதிச்சீட்டு இல்லாமல் அன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், காரமடை (மேற்கு) உள்பட பல இடங்களில் கிராவல் மண் இரவு நேரங்களில் கடத்தப்படுகிறது.

உடனடியாக ஆட்சியர் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்குவாரிகளுக்காக கனரக வாகனங்கள் கிராமப்புற சாலைகளை பயன்படுத்துவதால், அந்த சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் கிராம விவசாயிகள், வாகனங்களில் சென்று வர முடியவில்லை’ எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் கூறுகையில், 'அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டைக்காக விவசாயிகள் நிலம் எடுக்கப்படாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேநேரம் இந்த அறிவிப்புக்கு முன்னதாக, விவசாயிகள் நிலங்களையும் இணைத்து தொழிற்பேட்டை அமைக்க போடப்பட்ட அரசாணையை தற்போது வரை ரத்து செய்யப்படவில்லை. உடனே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களை வழங்கிய தஞ்சை விவசாயி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.