ETV Bharat / state

"அந்த மனசு தான் சார் கடவுள்": சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு தனது காரில் அனுப்பிய ஆ.ராசா எம்.பி!

author img

By

Published : Aug 16, 2023, 2:33 PM IST

சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு உடனடியாக தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

kovai
சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட ஆ.ராசா

சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு தனது காரில் அனுப்பிய எம்பி ஆ.ராசா

கோயம்புத்தூர்: திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா நேற்று (ஆகஸ்ட். 15) தனது தொகுதிக்குட்பட்ட அன்னூர், கணேசபுரம், கருவலூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். காலையில் அன்னூர் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு, மாலையில் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆ.ராசா பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.

அப்போது மணிப்பூர் விவகாரத்தில் பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், மத்திய அரசால் மாநிலங்கள் பழி வாங்கப்படுவது குறித்தும், மக்களை வாட்டி வதைக்கும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வராமல் இருக்க பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு சென்னை செல்வதற்காக அவிநாசியில் இருந்து சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோவை விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் சுங்கச்சாவடியை ஆ.ராசாவின் கார் கடந்து செல்லும் போது சாலையில் வேகமாக சென்ற இளைஞர் ஒருவர் லாரியில் மோதி மயங்கி விழுந்து கிடந்து உள்ளார். இதனைக் கண்ட ஆ.ராசா உடனடியாக தனது ஆதரவாளர்களுடன் காரை நிறுத்தி அந்த இளைஞருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

பின்னர் ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால் தனது காரிலேயே தன்னுடன் பயனித்த மருத்துவர் கோகுலை அந்த இளைஞருக்கு உதவியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விமான நிலையம் சென்று சென்னை சென்றார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சாலை விபத்தில் சிக்கிய நபர் திருப்பூரை சேர்ந்த தமிழ்செல்வன் என்பதும், சுங்க சாவடி அருகே லாரியை முந்த முயன்ற போது லாரியில் மோதி அவர் கீழே விழுந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஆ.ராசா இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் விபத்தில் சிக்கிய இளைஞரை உடனடியாக மீட்டு தன்னுடைய ஆதரவாளர்களை மருத்துவமனைக்கு உடன் அனுப்பி சிகிச்சை விவரம் குறித்து தனக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்ட சம்பவம் அங்கிருந்த மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "மாணவர்களிடம் ஜாதி மோதலை ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் திணிக்கின்றன" - திருமாவளவன் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.