ETV Bharat / state

பாலமலையில் ஜீப் கவிழ்ந்து 2 மூதாட்டிகள் பலி: இருவர் கவலைக்கிடம்!

author img

By

Published : Mar 4, 2020, 11:19 PM IST

கோவை: பாலமலையில் ஜீப் கவிழ்ந்து கேரளாவைச் சேர்ந்த இரு மூதாட்டிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இருவர் உயிருக்குப் போராடிவருகின்றனர்.

2 old women died in Jeep accident
2 old women died in Jeep accident

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பாலமலையிலிருந்து இன்று மாலை 5:30 மணியளவில் ஜீப் ஒன்று இறங்கிக்கொண்டிருந்தது. அப்போது மலையிலிருந்து மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, திடீரென ஜீப் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் விழுந்தது. பள்ளத்தில் விழுந்த ஜீப் சுக்குநூறாக நொறுங்கியது. அப்போது அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

ஜீப்பில் பயணித்தவர்கள்
ஜீப்பில் பயணித்தவர்கள்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களையும் படுகாயமடைந்தவர்களையும் மீட்டனர். படுகாயமடைந்த ஐந்து பேரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் பாலக்காடு மாவட்டம் அகழி கோட்டத்துறை அருகிலுள்ள வண்ணான்துறை மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் பாலமலை அடிவாரத்திலுள்ள ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த உறவினர் கேசவ பலராம் என்பவரின் மனைவி திவ்யாவின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக இன்று காலை வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பாலமலையிலுள்ள அரங்கநாதர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

ஜீப் கவிழ்ந்து விபத்து

அகழி கோட்டத்துறையைச் சேர்ந்த சிவனம்மாள் (65), மாதவன் என்பவரின் மனைவி பாப்பம்மாள் (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஜீப்பை ஓட்டிவந்த ஐயப்பன் (29), முருகன் (34), மாரியம்மாள் (80), மாதவன் (55) மருதன் (55) ஆகியோருக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: தீபாவளி சீட்டு என கூறி 2 கோடி ரூபாய் மோசடி - அரசுப் பேருந்தை சிறைபிடித்த மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.