ETV Bharat / state

இளங்கலை நீட் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

author img

By

Published : Mar 5, 2023, 8:57 PM IST

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத நாளை (மார்ச் 6) முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வு நாளை முதல் விண்ணப்பம்
நீட் தேர்வு நாளை முதல் விண்ணப்பம்

சென்னை: நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர கடந்த 2013-ம் ஆண்டு முதல் நீட் (NEET) எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இத்தேர்வில் வெற்றி பெற்றால் தான், மருத்துவப் படிப்புகளில் சேர முடியும். எனினும் இத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதனால் நீட் தேர்வுக்கு பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எனினும், மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல், உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு மருத்துவக்கல்லூரிகளில் 5,500க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் உள்ளன. 2023-24ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்தது. இந்நிலையில் இத்தேர்வினை எழுதுவதற்கு நாளை (மார்ச் 6)-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. neet.nta.nic.in என்ற இணைய முகவரிக்குள் சென்று உரிய படிவத்தை விண்ணப்பித்து, மாணவர்கள் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்.

என்.டி.ஏவின் இணைய முகவரிக்கு சென்ற உடன், மாணவர்கள் தங்களது சுய மற்றும் கல்வி குறித்த விவரங்களை குறிப்பிட வேண்டும். அதன்பின் கேட்கப்படும் ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம். பின்னர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பிறகு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை, பதிவிறக்கம் செய்து கொள்ள மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நீட் தேர்வினை 13 மொழிகளில் எழுதுவற்கான வாய்ப்பினை தேசிய தேர்வு முகமை வழங்கி உள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2021-ம் ஆண்டில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 617 பேர் நீட் தேர்வு எழுத பதிவு செய்ததில், 99 ஆயிரத்து 610 பேர் தேர்வினை எழுதினர். அவர்களில் 57 ஆயிரத்து 215 பேர் தகுதிபெற்றனர்.

இதேபோல் 2022ம் ஆண்டில் நாடு முழுவதும் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தகுதி பெற்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1 லட்சத்து 42ஆயிரத்து 984 பேர் பதிவு செய்ததில், 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் நீட் தேர்வு எழுதினர். அவர்களில் 67 ஆயிரத்து 787 பேர் தகுதிப்பெற்றனர். மேலும், 31,965 மாணவர்கள் தமிழில் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட இருக்கின்றது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5, 500க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இதையும் படிங்க: உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டம்: ரூ.16 லட்சத்தை இழந்தவர் கடலில் குதித்து தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.