ETV Bharat / state

ஆசன வாயில் வலி, இரத்தப்போக்கு மற்றும் அரிப்பு இருந்தால் மூல நோயா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 5:38 PM IST

Updated : Nov 20, 2023, 7:31 PM IST

World Piles Day 2023: மூல நோய் மக்கள் மத்தியில் பொதுவான பிரச்சனையாக மாறி வரும் நிலையில், இதற்கான முக்கிய காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மூல நோய்க்கான முக்கியத்துவத்தையும், காரணங்களையும் அறிவோம்
உலக மூல நோய் தினம் 2023

சென்னை: மூலம் அல்லது பைல்ஸ் இது எப்படி வருகிறது, இதற்கான காரணம் என்ன? அறிகுறி என்ன? உள்ளிட்டவை குறித்துச் சரியான புரிதல் இல்லாமல் பலர் சாதாரண பிரச்சனைகளும் மூலம் தொடர்பான பிரச்சனைதான் என நினைத்து தவறாகச் சிகிச்சையை மேற்கொள்கின்றனர். இதனால், அவர்களுக்குக் காலப்போக்கில் புற்றுநோய்கூட வரும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மூல நோய் என்றால் என்ன? ஆசன வாயின் மேல் பகுதியில் Inernal Henorrhoid மற்றும் External Hemorrhoid அதாவது சிறு ரத்த நாளங்களை உள்ளடக்கிய திசுக்கள் அடங்கிய பகுதி இருக்கின்றன. இது உடலில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படும் செயலில் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த ரத்த நாளங்கள் உடல் உஷ்ணம் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களாலே பாதிக்கப்பட்டு வீக்கம் அடைவதாலும், அந்த பகுதியில் இருந்து இரத்தக் கசிவு ஏற்படுவதாலும் இதனால் ஏற்படும் தொற்று காரணமாக அரிப்பு ஏற்படுவதையுமே மூலம் என்று சொல்கிறோம். இதுபோன்ற அறிகுறிகளுடன் கடுமையான வலியும் இருக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

மூல நோயின் நான்கு நிலைகள்

  • முதல் நிலை
மலம் கழிக்கும்போது இரத்தம் கசிதல்
  • இரண்டாம் நிலை
மலம் கழிக்கும்போது இரத்த கட்டிகள் வெளியே வந்து உள்ளே செல்லுதல்
  • மூன்றாம் நிலை
மலம் கழிக்கும்போது வெளியே வரும் இரத்தக் கட்டியை உள்ளே தள்ளிவிட வேண்டும்
  • நான்காம் நிலை
வெளியே வரும் இரத்தக் கட்டிகள் உள்ளே செல்லாமல் தொந்தரவாக இருக்கும்

தற்போதைய சிகிச்சை முறைகள்: இன்றைய நவீன மருத்துவ சூழலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமலேயே மூல நோய்க்கு மருத்துவர்கள் தீர்வு காண முடியும் எனக்கூறுகிறார்கள். அந்த வகையில் "முதல் மற்றும் இரண்டாம் நிலையுடன்" வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் வழங்கும் அறிவுரை என்னவென்றால்?

  1. நார்ச்சத்து நிறைந்த அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது
  2. காலை மற்றும் மலை வேளைகளில் கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்வது
  3. அதனுடன் மருத்துவர் வழங்கும் மருந்துகளைச் சரியாக உட்கொள்வது

இதை உங்கள் வாழ்க்கை நடைமுறையில் தொடர்ந்து சரியாகப் பின்பற்றி வருவதன் மூலம் நாளடைவில் மூல நோய் பிரச்சனையின் இருந்து முழுமையாக விடுபட முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், "மூன்று மற்றும் நான்காம் நிலையில்" சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக மருத்துவர்கள் அறிவுறுத்தலாம். அது நோயாளிகளின் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து அதன் அடிப்படையில் அறிவுறுத்துவார்கள். அந்த வகையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதும் முன்பு இருந்ததுபோல மிகக் கடினமானதோ அல்லது வலி மிக்கதாகவோ இருக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் தற்போதைய சூழலில், "ஹார்மோனிக் லிகாஷோர்" என்ற நவீன சிகிச்சை மூலமாக நோயாளிகளுக்கு ஒரு சொட்டு உதிரம் கூட வெளியேறாமல் மிகக் கச்சிதமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும். அதேபோல, "டோப்ளர்" எனும் கருவியைக்கொண்டு, இரத்த குழாய்கள் எங்கு வீக்கம் அடைந்துள்ளது, எங்கிருந்து இரத்தம் கசிகிறது என்பதை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

ஆசன வாயில் வலி, இரத்தப்போகக்கு மற்றும் அரிப்பு இருந்தால் மூல நோயா? இதுபோன்ற அறிகுறிகள் இருப்பதால் அதை மூல நோய்தான் என உறுதி செய்ய முடியாது. சிலருக்குச் சூடு காரணமாக மூலத்தில் கட்டி வந்து போகலாம். அது மட்டும் இன்றி மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று காரணமாக சொறு சொறுப்பு தன்மையுடன் கூடிய கட்டி மூலத்தில் வரலாம்.

இதை மாறுதலாக மூலம் என நினைத்து வீட்டு வைத்தியம் அல்லது மருந்துக் கடைகளில் இருந்து தாங்களாகவே மருந்துகளை வாங்கி உட்கொண்டால் இது உயிருக்கே உலை வைத்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உங்களுக்கு வந்திருக்கும் மூல கட்டி எந்த வகையானது என்பதை மருத்துவரை அணுகி முறையான ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மூல நோய் வருவதற்கான முக்கிய காரணம்: உணவுப் பழக்க வழக்கம்தான் மூல நோய் வருவதற்கான முக்கிய காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மைதா மாவு மற்றும் அதனால் தயாரிக்கப்படும் பிற உணவுகளை அடிக்கடி அதிகம் உட்கொள்வதும், நார்ச் சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை உட்கொள்ளாமல் இருத்தல் மற்றும் உடலுக்குத் தேவையான அளவு தொடர்ந்து தண்ணீர் குடிக்காமல் இருத்தல்தான் முதல் முக்கியக் காரணங்களாக உள்ளன.

மேலும், இறைச்சி அடிக்கடி அதிக அளவில் உட்கொள்ளும்போது அதைச் செரிக்கச் செய்யத் தேவையான நீர்ச் சத்து உடலில் இல்லை என்றாலும் மூல பிரச்சனை வரலாம். மூல பிரச்சனை உள்ளவர்கள் இறைச்சிக்குப் பதிலாக மீன் மற்றும் முட்டை சாப்பிடுவது சிறந்தது. உடல் அதிக அளவில் சூடாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பது. குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வது மூல நோயில் இருந்து காப்பாற்றும்.

மூல நோய்க்கான நிரந்தர தீர்வு என்ன? உறங்கும்போது மனச் சிக்கலும், எழும்போது மலச் சிக்கலும் இல்லாமல் இருக்கும் மனிதன் ஆரோக்கியமான மனிதன் என்றே கூறலாம். அந்த வகையில் மூல நோய்க்கு நிரந்தரமான தீர்வு ஒன்று உள்ளது என்றால் அது உங்கள் வாழ்வியலில் நீங்கள் மேற்கொள்ளும் மாற்றமாகத்தான் இருக்கும்.

அறுவைச் சிகிச்சை மேற்கொண்டாலும் சிலருக்கு மீண்டும் மூல நோய் வரும் அபாயம் உள்ள நிலையில், உணவுப் பழக்க வழக்கம், உறக்கம், உடற்பயிற்சி உள்ளடக்கிய மாற்றத்தைக் கொண்டுவாருங்கள் மூல நோயில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

இதையும் படிங்க: வாழ்க்கையில் முன்னேறிய செல்வந்தர்களின் 7 ரகசிய குணம்.!

Last Updated : Nov 20, 2023, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.