ETV Bharat / state

காமராஜர் ஆட்சிக்கு பாடுபட வேண்டும்: கே.எஸ். அழகிரி

author img

By

Published : Jul 15, 2021, 3:16 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்த தொண்டர்கள் பாடுபட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

கே.எஸ். அழகிரி
கே.எஸ். அழகிரி

முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 119ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கே.எஸ்.அழகிரி, கட்சித் தொண்டர்களுடன் காமராஜர் அரங்கத்தில் இருந்து தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லம் வரை பேரணியாக சென்றார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ். அழகிரி, "பெருந்தலைவர் காமராஜருக்கு சில சிறப்புகள் உண்டு. கட்சி மாறாத ஒரே தலைவர் பெருந்தலைவர் காமராஜர். தேர்தலில் தோல்வி பெற்றாலும் அஞ்சா நெஞ்சுடன் இருந்தார்.

ஆங்கில அறிவு கொண்டவர்கள், செல்வந்தர்கள், உயர் வகுப்பினர் போன்றவர்கள்தான் காங்கிரஸ் தலைவராக இருக்க முடியும் என்பதை உடைத்து எறிந்தவர்.

அன்று ஆட்சியில் இருந்த திமுகவுக்கு எதிராக அவர் ஒரு மாபெரும் பேரணி நடத்தினார். சென்னையில் அது போன்ற பிரமாண்ட பேரணி இதுவரை யாரும் நடத்தவில்லை.

காமராஜர் சிலைக்கு மரியாதை
காமராஜர் சிலைக்கு மரியாதை

இட ஒதுக்கீட்டுக்கு காரணம் காங்கிரஸ்

அரசியல் சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என காமராஜர் நேருவிடம் சொன்னார். இதன் விளைவாகத்தான் முதல் அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் விளைவுதான் இன்று நாம் பெற்றுள்ள இட ஒதுக்கீடு, சமூக நீதி. இந்தியாவில் எந்த கட்சியும் இட ஒதுக்கீடுக்கு உரிமை கோர முடியாது, காங்கிரஸ் கட்சிதான் கோர முடியும்.

12,500 ஆரம்ப பள்ளிகளை 5 ஆண்டுகளில் ஏற்படுத்தினார். குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்கினார். அன்று அவர் வழங்கிய கல்வியால்தான் தமிழ்நாடு இன்று கல்வியில் சிறந்து விளங்குகிறது.

மீண்டும் காங்கிரஸ் ஆட்சி

தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபட வேண்டும். நாம் கூட்டணியில் உள்ளோம் என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் கொள்கையை அவர்கள் செய்வார்கள், நமது கொள்கையை நாம் செய்ய வேண்டும். திமுக கூட்டணியில் இருப்பதால் நாம் நாளைக்கு ஆட்சிக்கு வரக்கூடாது என்று இல்லை. மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முயன்று தோல்வியடைந்துள்ளது. சாதியின் பெயரால் பாஜக தமிழ்நாட்டை பிரிக்க நினைக்கிறது.ஒரு காலத்திலும் தமிழ்நாட்டை பிரிக்க காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது" என்று கூறினார்.

காமராஜர் சிலைக்கு மரியாதை

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், "காமராஜர் தமிழ்நாட்டுக்கு மட்டுமான தலைவர் அல்ல; அவர் ஒரு தேசிய தலைவர். கல்வி, சுகாதாரம், நீர் பாசனம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் சிறப்பாக செயலாற்றினார். அவரது பிறந்தநாளை ஒரே ஒரு நாள் மட்டும் கொண்டாடுவதை விட்டு, நாள்தோறும் அவரது கொள்கைகளை பின்பற்ற நாம் முயற்சிக்க வேண்டும்" என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.