ETV Bharat / state

உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த தமிழக வீரர்கள் யார் யார்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 10:45 AM IST

Chess Tournament: செஸ் உலகில் வல்லவராக வலம் வந்த மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் வீழ்த்தி உள்ளனர். யார் அந்த வல்லவர்கள் என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Chess Tournament
செஸ் போட்டிகள்

சென்னை: செஸ் என்றாலே விஸ்வநாதன் ஆனந்த், மேக்னஸ் கார்ல்சன் என்ற இரு பெயர்கள்தான் முதலில் நம் அனைவரின் ஞாபகத்திற்கு வரும். செஸ் உலகில் முடிசூடா மன்னராக வலம் வந்தவர், கார்ல்சன். இவர் வென்ற கதைகள் உலகம் முழுவதும் பேசப்பட்டாலும், இது வரை மூன்று இந்தியர்களிடம் வீழ்ந்து உள்ளார்.

அந்த வகையில், தற்போது கத்தாரில் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் 7வது சுற்றில், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனும், இந்திய வீரர் கார்திகேயன் முரளியும் எதிர்கொண்டு விளையாடினர்.

இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி, தனது 40வது காய் நகர்த்தலின்போது வெற்றி பெற்றார். இதன் மூலம் கிளாசிக் போட்டியில் கார்ல்சனை வீழ்த்திய முன்றாவது இந்தியர் என்றும், கார்ல்சனை வீழ்த்திய இரண்டாவது தமிழர் என்ற பெருமையையும் பெற்று உள்ளார்.

செஸ் உலகின் வல்லவர்: நார்வே நாட்டைச் சேர்ந்த 32 வயதான கார்ல்சன், கடந்த 2004ஆம் ஆண்டு தனது 13வது வயதில் “கிராண்ட் மாஸ்டர்” பட்டத்தை வென்றார். இதனைத் தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டு முதன் முறையாக உலக செஸ் போட்டிகளில் விளையாடி, உலகில் நம்பர் ஒன் இடத்தைக் கைப்பற்றி, மிகப்பெரிய சாதனையைப் படைத்தார். 2023ஆம் ஆண்டு கடந்த மே மாதம் தரவரிசை நிலவரப்படி, உலகில் நம்பர் ஒன் இடத்தை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்கவில்லை.

கடந்த 2013ஆம் ஆண்டு “உலக செஸ் சாம்பியன்ஷிப்” பட்டத்தை வென்றார். தொடர்ச்சியாக 2014, 2016, 2018 மற்றும் 2021 என மொத்தம் ஐந்து முறை உலகக் கோப்பை செஸ் போட்டியில் வென்று செஸ் உலகின் முடிசூடா நாயகனாக வலம் வந்தார்.

தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த கார்ல்சனை வெல்வது இயலாத காரியம் என்று செஸ் உலகில் பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில்தான் கார்ல்சனை தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் வீழ்த்தி உள்ளனர். தனது செஸ் விளையாட்டுப் பயணத்தில் கார்ல்சன் மொத்தம் 3,378 ஆட்டங்களில் 1,440 ஆட்டங்கள் வெற்றி பெற்றுள்ளார். 1,434 ஆட்டங்கள் டிரா, 504 ஆட்டங்கள் தோல்வி அடைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வல்லவனுக்கு வல்லவனாக இருந்த வீரர்கள்: முதன் முதலாக கடந்த 2013ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை சர்வதேச செஸ் ஃபெடரேன் (Chess Federation) நடத்தியது. மொத்தம் 12 போட்டிகள் நடைபெற்றன. இதில் 10வது ஆட்டத்தின் முடிவில் அப்போது 22 வயது இளைஞராக இருந்த நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் கிராண்ட் மாஸ்டர் ஆனந்தை வீழ்த்தினார். அதன்பின், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஆட்டத்தில் கார்ல்சனை ஆனந்த் வீழ்த்தினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அஜர்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் ஆர்.பிரக்ஞானந்தா கலந்து கொண்டார். இந்த போட்டியில் நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சனும், பிரக்ஞானந்தாவும் மோதும் இறுதிச்சுற்றின் 2 ஆட்டமும் டிராவில் முடிந்தது.

இறுதியில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஆட்டத்தில் டை பிரேக்கரில் இரண்டாவது முறையில் கார்ல்சன், பிரக்ஞானந்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். முன்னதாக, கடந்த 2016, 2018, 2022 என மூன்று முறை பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தி உள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் கார்ல்சன் வெற்றி பெற்றாலும், பிரக்ஞானந்தாவை தோற்கடிக்க இரண்டு முறைகள் தேவைப்பட்டன.

இந்த வரிசையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் கார்ல்சனுக்கு சவாலான ஆட்டத்தை தமிழக செஸ் வீரர் குகேஷ் வெளிப்படுத்தினார். இதற்கு முன்னதாக நடைபெற்ற எயிம்செஸ் ரேபிட் போட்டியில் (Aimchess Rapid) உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்

தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி எதிர்க்கொண்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகள் கவனத்திற்கு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.