ETV Bharat / state

செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என ஆளுநர் எங்கு சொல்லியிருக்கிறார்? - உயர் நீதிமன்றம் கேள்வி!

author img

By

Published : Jun 26, 2023, 1:28 PM IST

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் விருப்பமில்லை எனத் தெரிவித்த ஆளுநர், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எங்கு சொல்லியிருக்கிறார்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

minister senthil balaji
அமைச்சர்

சென்னை: திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியை சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் கடந்த 14ஆம் தேதி கைது செய்தனர். செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் உள்ள நிலையில், அவரிடம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன.

செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த 16ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், "அமைச்சரை நியமிப்பதில் ஆளுநருக்கும் அதிகாரம் உள்ளது. நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதிக்காதது சரியானது. நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரால் அமைச்சரவைக் கூட்டங்களிலும் கலந்து கொள்ள முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது சட்ட விரோதமானது.

நீதிமன்றக் காவலில் உள்ளவர் அமைச்சரவையில் நீடிக்கலாமா? கூடாதா? என்பது குறித்து நீதிமன்ற தீர்ப்புகள் ஏதுமில்லை. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க அனுமதிப்பது ஆளுநரின் அதிகாரத்துக்கு விரோதமானது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்ற அரசாணையை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும், அதை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சரவையில் நீடிக்கிறார்? என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி, சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் இன்று(ஜூன் 26) தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது தலைமை நீதிபதி, செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் தனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்த ஆளுநர், அமைச்சரை நீக்க வேண்டும் என எங்கு சொல்லியிருக்கிறார்? என மனுதாரர்கள் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனுதாரர் தரப்பில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க வேண்டும் என முதலமைச்சர், ஆளுநருக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க வேண்டும் என முதலமைச்சர் ஆளுநரை கேட்டிருக்கிறாரா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், வழக்கை சந்திப்பதற்காக தகுதி இழப்பு ஆகவில்லை, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டிக்கப்பட்டால் மட்டுமே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தகுதி இழப்பு ஆகிறது எனத் தெரிவித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க அனுமதி கோரி முதலமைச்சர், ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிற்பகலுக்குத் தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி எந்த தகுதி அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார்? - கோ வாரண்டோ வழக்கு தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.