ETV Bharat / state

தாம்பரத்தில் உருவாக்கப்பட்ட புதிய காவல் ஆணையரகம் - 5 மாதங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

author img

By

Published : Jun 15, 2022, 9:25 PM IST

சென்னை தாம்பரத்தில் புதிய காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டு 5 மாதங்களான நிலையில் இதுவரை அங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விளக்குகிறது, இந்த தொகுப்பு...

புதிய காவல் ஆணையரகம்
புதிய காவல் ஆணையரகம்

சென்னை: திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபிறகு தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய நகரங்களை, புதிய மாநகராட்சிகளாக அறிவித்து அரசாணை வெளியிட்டது. அதன்படி தாம்பரம் மற்றும் ஆவடியில் புதிய மாநகர காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்பட்டன.

மேலும் சென்னை புறநகர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியப் பகுதிகளில் இருந்து காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டு தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் இணைக்கப்பட்டன. அதில் 20 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 1 மகளிர் காவல் நிலையம், 3 போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையம் மற்றும் 7 போக்குவரத்து காவல் நிலையம் செயல்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட ரவி ஐ.பி.எஸ், கடந்த ஜனவரி மாதம் தாம்பரம் மாநகர காவலன் ஆணையரகத்தின் முதல் காவல் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தாம்பரம் காவல் ஆணையாளர் ரவி உத்தரவின்படி, தாம்பரம் காவல் ஆணையரகத்தின் எல்லைக்குள் நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, நில அபகரிப்பு, செல்போன் மற்றும் செயின் பறிப்பு ஆகிய குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து அதிரடியாக கைது செய்து, நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த 5 மாதங்களாக ரவி ஐபிஎஸ் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த மே 31ஆம் தேதியன்று ரவி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரைத்தொடர்ந்து ஆவடி காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் வசம் தாம்பரம் காவல் ஆணையர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையராக தமிழ்நாடு காவல் அகாடமி இயக்குநராக இருந்த ஏடிஜிபி அமல்ராஜை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் கடந்த வாரம் அமல்ராஜ் ஐபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமல்ராஜ் ஐபிஎஸ்
ஐபிஎஸ் அலுவலர் அமல்ராஜ்

பொறுப்பேற்றபின்னர் காவல் துறையினர்களுக்கு அறிவுரை வழங்கினார். சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து, குற்றங்களைத் தடுத்து, பொதுமக்கள் பாராட்டும் வகையில் செயல்பட முயற்சி செய்வோம் என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் தாம்பரம் காவல் ஆணையரகம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு, ஐந்து மாதங்களில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் குறித்து காவல் துறை உயர் அலுவலர் கூறியதாவது, 'கடந்த 5 மாதங்களில் 402 ரவுடிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 காவல் மாவட்டங்களில் 23 கொலைகள் நடந்துள்ளன.

அதில் 43 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 87 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 750 பேர் மீது 110 விதியின் கீழ் நன்னடத்தை பிணை உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கியுள்ளனர். ஆணையரகம் தொடங்கப்பட்டது முதல் திருட்டு வழக்குகள் 45 பதிவு செய்யப்பட்டு, 15 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. 28 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஆணையர் அவர்களால் ஒப்படைக்கப்பட்டது.

8427 புகார் மனுக்கள் பெறப்பட்டு 7021 மனுக்ளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்ததாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 எதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களிடமிருந்து 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா விற்பனை செய்ததாக 132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 141 நபர்கள் கைது செய்யப்பட்டு, 2617 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மற்ற போதை பொருட்கள் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதிய காவல் ஆணையரகம்
புதிய காவல் ஆணையரகம்

போக்குவரத்தை சீர் செய்யும் வகையிலும், வழிப்பறி, விபத்துகளைத் தடுக்கும் வகையில் 10 சிவப்பு சுற்று காவல் வாகனங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. போக்குவரத்தை சரிசெய்யும் நோக்கில் இரண்டு போக்குவரத்து உட்கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, தலா 7 போக்குவரத்து காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் 14 போக்குவரத்து காவல் நிலையங்களுக்கும் 28 இரு சக்கர மார்சல் வாகனங்கள் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்தை கண்காணிக்கும் வகையில் 15 வெள்ளை நிற வாகனங்கள், ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்தைக் கண்காணிக்க 7 நீல நிற இருசக்கர வாகனங்கள், ஈசிஆரில் 8 மஞ்சள் நிற இரு சக்கர வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 2 ஷிஃப்டுகளாக காவலர்கள் போடப்பட்டு தடையில்லா போக்குவரத்து உறுதி செய்யப்படுகிறது. மேலும் பிடிபட்ட குற்றவாளிகளில் இதுவரை 47 பேருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாக காவல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். வளர்ந்து வரும் பகுதி என்பதால் நில அபகரிப்பு புகார்கள் அதிகமாக வருவகிறது. இதனை எதிர்கொள்வது மிகவும் சவாலான பணியாக உள்ளது. இதுவரை 250 புகார்கள் மத்திய குற்றப்பிரிவிற்கு வந்துள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருந்து 550 வழக்குகள் மாற்றப்பட்டுள்ளதாக’ தெரிவித்தனர்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்ட பிறகு குற்றங்கள் குறைந்ததா? பொதுமக்களின் கருத்து:-’தாம்பரம் ஆணையரகத்தின் எல்லைக்குட்பட்ட சாலைகளில் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் சாலைகளில் சிக்னல்கள் சரியாக வேலை செய்யவில்லை. தாம்பரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா வியாபாரங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், காவல் துறையினர் உடனடியாக கஞ்சா வியாபாரிகளையும் கைது செய்து வருகின்றனர். இது பாராட்டத்தக்க ஒன்று.

முக்கியப் பகுதிகளில் மட்டும் இல்லாமல் அனைத்துப் பகுதிகளுக்கும் ரோந்து வாகனங்களைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் அதற்காக அதிக வாகனங்களை பயன்படுத்த வேண்டும். அதேபோல் செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு போன்ற செயல்களும் புறநகர் பகுதியில் அதிகளவில் நடைபெறுகின்றன. ஆனால் சிசிடிவி கேமராக்கள் சரியாக வேலை செய்யாததால் அதில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

காவல் ஆணையரகம் முழுவதும் நவீனமயமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் எதுவும் சரியாக வேலை செய்யவில்லை. தாம்பரம் காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டு பெரிய அளவில் குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். அதேபோல் காவல்துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் ’எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் ’தாம்பரம் காவல் ஆணையரகம், அதற்கு உட்பட்ட சங்கர் நகர் காவல் எல்லையில், கடந்த மாதம் கடன் பிரச்னையால் மரம் அறுக்கும் ரம்பம் இயந்திரத்தால் கணவன் தனது மனைவி 2 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தாம்பரம் காவல் ஆணையர் இடத்தில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக’ காவல்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பெண்கள் விடுதியில் ரகளை செய்த நேபாளி; பிடித்து ஒப்படைத்த பெண்கள்... கண்டுகொள்ளாமல் ரோட்டில்விட்ட காவல் துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.