ETV Bharat / state

விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

author img

By

Published : Dec 19, 2022, 3:53 PM IST

Updated : Dec 19, 2022, 4:06 PM IST

தெலுங்கு படமான 'உப்பெனா' (uppena) படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை என நடிகர் விஜய் சேதுபதி பதிலளித்ததை தொடர்ந்து அவருக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து: நீதிமன்றம்
விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து: நீதிமன்றம் (கோப்புப்படம்)

சென்னை: தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் தெலுங்கில் உருவான 'உப்பெனா' (uppena) படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் புஜ்ஜி பாபு சனா படத்தை இயக்கி இருந்தார்.

விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றதால், அதை தமிழில் மறு உருவாக்கம் செய்யும் ரீமேக் உரிமையை, அந்த படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின், விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தனது கதை திருடப்பட்டு உப்பெனா படம் உருவாக்கப்பட்டதாக தேனியைச் சேர்ந்த எஸ்.யு.டல்ஹவுசி பிரபு என்ற உதவி இயக்குநர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதில் தான் உருவாக்கிய உலகமகன் என்ற கதையை தர்மபுரியைச் சேர்ந்த சம்பத் என்ற உதவி இயக்குநரிடம் 2015ஆம் ஆண்டு தெரிவித்து இருந்ததாகவும், சம்பத்துக்கு அனுப்பிய உலகமகன் கதை சிலரால் திருடப்பட்டு தெலுங்கில் உப்பெனா என்ற படமாக உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, ’உப்பெனா படத்தின் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும். அதன் மூலம் ஈட்டிய வருமானத்தில் 50 சதவீதத்தை தனக்கு இழப்பீடாக கொடுக்க உத்தரவிட வேண்டும். அதன் ரீமேக்கை தமிழில் விஜய் சேதுபதி பட நிறுவனம் தயாரிக்க தடை விதிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்திருந்தார்.

டல்ஹவுசி பிரபு தொடர்ந்த வழக்கு குறித்து விஜய் சேதுபதி பட நிறுவனம், தெலுங்கில் படத்தை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ், இயக்குநர் புஜ்ஜி பாபு சனா ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கு நீதிபதி சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் சேதுபதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உப்பென்னா திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை தான் வாங்கவில்லை. அதற்கான எந்த ஆதாரங்களையும் மனுதாரர் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார். விஜய் சேதுபதிக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வாதிட்டார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மற்றவர்களுக்கு எதிரான வழக்கு நாளை (டிச.20) விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: வாழ்.. தனிமையை இனிமையாக்கிய முதியவர்கள்.!

Last Updated : Dec 19, 2022, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.