ETV Bharat / state

குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் - வைகோ அறிவுரை

author img

By

Published : Dec 28, 2020, 10:18 AM IST

குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர், சமூகத்தினர், அரசு என அனைவரும் அக்கறை செலுத்தி, அவர்களுக்கு கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

vaiko adviced Pay extra attention to child protection
vaiko adviced Pay extra attention to child protection

சென்னை: பெண் குழந்தைகள் மீது தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிகளைத் தடுக்க குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவருவதை, அன்றாடம் பதிவுசெய்யப்படுகின்ற போக்சோ வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது.

கரோனா பொதுமுடக்கத்தின் விளைவாக வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களில், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலாமல் பணிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அடித்தட்டு ஏழை எளிய குடும்பங்களுக்கு, அரசு நிதி உதவிகள் போதுமான அளவு கிடைக்கவில்லை. இக்கரோனா காலகட்டத்தில் லட்சக்கணக்கான நடுத்தர குடும்பங்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழே சென்றுவிட்டன.

இத்தகைய சூழலில், பெண் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த, குடும்பத்தினரே பின்னணியாக இருந்தார்கள் என்பதை அறிவது வேதனையை ஏற்படுத்துகின்றது. இதன்காரணமாக, நாட்டில் நிலவுகின்ற வறுமையின் கொடுமையை உணர முடிகின்றது.

அயனாவரத்தில் வாய் பேச முடியாத சிறுமிக்குக் கொடுமை இழைத்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார்கள். பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், பெற்றோர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மேலும், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இருப்பினும் மக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறையினரே, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகின்ற ஒரு சில காவலர்களால், காவல் துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுகின்றது. எனவே, குற்றம் இழைக்கின்ற காவலர்கள், பாலியல் தரகர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் அக்கறை கொண்டு, கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சமூகமே நோய்வாய் பட்டிருப்பதை காட்டும், குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.