ETV Bharat / state

’பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும்’: பாஜகவினருக்கு அமித் ஷா அறிவுரை

author img

By

Published : Nov 22, 2020, 8:49 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்த பாஜகவினர் உழைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.

அமித் ஷா
அமித் ஷா

பாஜக உயர்நிலை ஆலோசனை கூட்டம் சென்னை எம்.சி.ஆர் நகரில் உள்ள தனியார் விடுதியில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இதற்கு முன்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயகுமார், எம்.பி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை 40 நிமிடங்கள் வரை நடைபெற்றது

நேற்று (நவ.22) நடைபெற்ற பாஜக உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பாஜக கட்சியை தமிழ்நாட்டில் அமைப்பு ரீதியாக வலுப்படுத்த வேண்டும், பூத் கமிட்டிகளை எல்லா இடங்களிலும் அமைத்து பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

பாஜக ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், ”தமிழ்நாடு பாஜக கட்சிக்கு அமைச்சர் அமித் ஷா பல ஆலோசனை வழங்கினார். தேர்தல் கூட்டணி மட்டுமின்றி பல விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோம். அவரும் எங்கள் கோரிக்கைகளை பொறுமையாக கேட்டுகொண்டார்”என்றார்.

கே.டி.ராகவனிடம் கூட்டணி பாஜக நிலைப்பாடு குறித்து எழுப்பியக் கேள்விக்கு, அதிமுக உடன் பாஜக கூட்டணியா என்பதை மாநில தலைவர் உரிய நேரத்தில் அறிவிப்பார் என்றார்.

பாஜக மாநில தலைவர் எல்.முருகன்,”தமிழ்நாடு அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவாகி வருகின்றது. பாஜக எங்கு என கேட்டவர்கள் தற்போது எங்கும் பாஜகவை பார்த்து வருகின்றனர். பல இளைஞர்கள் பாஜக கட்சியில் இணைந்து வருகின்றனர். மோடியின் ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என அனைவரும் நினைக்கின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் கரோனாவிற்கு பயந்து இன்று வரை வெளியே வரவில்லை. ஆனால் பாஜகவினர் உயிரை துச்சமாக கருதி சேவைகள் தற்போது வரை செய்து வருகின்றோம். குடும்ப ஆட்சி திமுக ஊழலுக்கு பெயர் போனவர்கள்”என்றார்.

இதையும் படிங்க:அமித்ஷா விடம் முதலமைச்சர் வைத்த மூன்று கோரிக்கைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.