ETV Bharat / state

வேளாண் சட்டங்கள்போல் நீட் தேர்வும் திரும்பப்பெறப்படும்: பாலகிருஷ்ணன்

author img

By

Published : Mar 9, 2022, 5:28 PM IST

மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப்பெற்றது போல், நீட் தேர்வு சட்டத்தையும் திரும்பப்பெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் பேச்சு
திருமாவளவன் பேச்சு

சென்னை: நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் எனவும், ஆளுநர் உடனடியாக நீட்டுக்கு எதிரான சட்ட மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் 48 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரதப்போராட்டத்தின்போது தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பப்பட்டது.

போராட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

போர்ச் சுழலிலும் நீட் தேர்வை ரத்து செய்ய எண்ணமில்லை

போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், "விவசாய சட்டத்தை எவ்வாறு மோடி நாடாளுமன்றத்தில் திரும்பப்பெற்றாரோ அதே போல் அதே கட்டாயத்தில் நீட் தேர்வு சட்டத்தையும் மீண்டும் பெறுவார். கரோனா காரணமாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்காமல் இருந்தார்கள். தற்போது மாணவர்கள் நீட் திணிப்புக்கு எதிராக போராடி வருகின்றனர்.

மாணவர்கள் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டால் மெரினா போராட்டத்தையும்விட பெரிதாக இந்தப் போராட்டம் வெடிக்கும். இதற்கு ஒன்றிய அரசு மண்டியிடும். கிராமப்புற மக்கள், அன்றாடம் உழைக்கும் மக்கள், ஏழை, எளிய மக்கள் மருத்துவ மாணவர்களாக வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நீட் தேர்வைக் கொண்டு வந்துள்ளனர்.

நீட் தேர்வால் தான் இந்திய மாணவர்கள் உக்ரைன் நாட்டிற்குச் சென்று மருத்துவம் படிக்கின்றனர். தற்போது போர் நடந்து வரும் நேரத்திலும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வராதது கவலை அளிக்கிறது. சட்டப்பேரவையிலும் நீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசும் நீட் தேர்வுக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடி வருகிறது" எனத் தெரிவித்தார்.

ஆளுநர் மெத்தனம் - போராட்டங்கள் ஓயாது

திருமாவளவன் பேச்சு
திருமாவளவன் பேச்சு

முன்னதாக மேடையில் பேசிய திருமாவளவன், " நீட் தேர்வு விலக்கு மசோதா 2ஆவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தீர்மானம் நிறைவேற்றி ஒரு மாதம் ஆகியும் வழக்கம்போல் ஆளுநர் மௌனமாக உள்ளார். ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வகையில் 48 மணி நேரம் இந்தப் போராட்ட அறிவிப்பு அமைந்துள்ளது.

மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமேயானால் மட்டுமே ஆளுநர் மாநில அரசுக்கு திருப்பி அனுப்பலாம். மற்றபடி நிச்சயமாக இதனை குடியரசுத்தலைவருக்கு அனுப்பியே ஆகவேண்டும். மாநில அரசு அழுத்தம் கொடுத்தால் பணிந்துவிட முடியாது என்று மாநில அரசை எச்சரிக்கும் வகையில்தான் ஆளுநர் முதல் மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார். அதனால் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் போடப்பட்டு இவ்விவகாரத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

உ.பி.யில் மீண்டும் பாஜக வெற்றி என்பது ஆபத்தானது

இந்நிலையில் ஒரு மாதம் ஆகியும் ஆளுநர் மெத்தனம் காட்டி வருகிறார். நீட் தேர்வுக்கு எதிரான மசோதா நிறைவேற்றும் வரை போராட்டங்கள் ஓயாது. அடுத்தடுத்த படிப்புகளுக்கும் இதுபோன்ற தேர்வுகளை வைத்து, எளியோர் யாரும் வளர்ச்சி அடையக்கூடாது என்கிற எண்ணம் சனாதனவாதிகளுக்கு உண்டு. கிராமத்தில் உள்ளவர்கள் யாரும் ஆடு மேய்க்க, மாடு மேய்க்கசெல்வதில்லை. அவர்கள் முன்னேறி வருகின்றனர். சமூக மாற்றம் நடைபெற்று வருகிறது.

இவர்கள் கல்வியின் மூலம் வளர்ச்சி பெற்று வருவதை தடுக்கத்தான் நீட் என்ற பெயரில் தடைகள் வந்து கொண்டிருக்கின்றன. பள்ளி கல்வியிலேயே நம்மை முடக்க வேண்டும் என்பது தான் அவர்கள் எண்ணம். ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வருகின்றது. அவை கவலை அளிப்பதாக இருக்கிறது.

நாட்டின் பிரதமராகவோ, மாநில முதலமைச்சராகவோ ஒரு தலித் வந்து விடலாம், ஆனால், சங்கர மடாதிபதியாக ஒருபோதும் பிராமணர் அல்லாத ஒரு தலித் வந்துவிட முடியாது. இது ஆபத்தான அரசியல். நீட் மட்டுமின்றி சன்பரிவாரை எதிர்த்து போராட வேண்டிய நேரம் இது. அவர்களை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும். அவர்களின் சதியை உணர்ந்து, நீட் உள்ளிட்டவற்றை எதிர்த்து நாம் போராட வேண்டும்" எனப் பேசினார்.

இதையும் படிங்க: உ.பியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேசத்திற்கே கேடு விளைவிக்கும் - திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.