ETV Bharat / state

சென்னையில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.. பின்னணி என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 5:51 PM IST

chennai
சென்னையில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

சென்னையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி மற்றும் அண்ணாமலையின் போராட்ட நிகழ்வுகளில் போக்குவரத்து பிரச்சனை பெரும் சர்ச்சயை ஏற்படுத்திய நிலையில் அப்போது பணியில் இருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை: நுங்கம்பாக்கம் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் காவல்துறையினர், முறையாக போராட்டத்தை தடுத்து நிறுத்தாமல் செயல்பட்டதால் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் சென்னை கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் திஷா மிட்டல் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதேபோல், தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டதால் தள்ளுமுள்ளு, கூட்ட நெரிசல், போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தற்போது தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை செய்து வருகிறார். இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ஏசிடிசி நிறுவனமும் மன்னிப்பு கோரியுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக சென்னை பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையரான தீபா சக்தியன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளரான ஐபிஎஸ் அதிகாரி ஆதர்ஷ் பச்சேரா திருநெல்வேலி கிழக்கு சரக இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூறியது என்ன? பதில் கூற மறுத்த காவல் ஆணையர்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.