ETV Bharat / state

ஸ்டாலின் நினைத்தால் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம் - டிடிவி தினகரன் விமர்சனம்

author img

By

Published : Mar 8, 2023, 5:19 PM IST

Updated : Mar 8, 2023, 5:57 PM IST

அமைச்சர் பொன்முடி பேசியது காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறது என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்தால் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி பேசியது காட்டுமிராண்டித்தனமானது - டிடிவி தினகரன்
அமைச்சர் பொன்முடி பேசியது காட்டுமிராண்டித்தனமானது - டிடிவி தினகரன்

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா இன்று (மார்ச் 8) கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமமுகவின் மாவட்ட, மாநில மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “துரோகத்தால்தான் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை தன் கைப்பிடியில் வைத்திருக்கிறார். அதேபோல், துரோகம் எனும் கத்தியை எடுத்த பழனிசாமி, துரோகத்தாலேயே வீழ்த்தப்படுவார். மேலும் மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என மாறு தட்டிக் கொண்டிருக்கிறார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு

ஆனால், திமுகவின் மீது அதிருப்தி இருந்தும் 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இரட்டை இலை இருந்தும், பணபலம் இருந்தும் அதிமுகவால் இன்று வெற்றி பெற முடியவில்லை. வரும் காலத்தில் அதிமுக ஒன்றிணையும். அதற்கான அறிகுறிகளைத்தான் தற்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் அமமுக, மக்கள் மத்தியில் தைரியமாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி தனியாக கட்சியை ஆரம்பித்து வென்று காட்டினால், அன்று மாறு தட்டிக் கொள்ளலாம். அதை விடுத்து, ஜெயலலிதா உடன் ஈபிஎஸ்சை ஒப்பிட்டால், அது ஜெயலலிதாவுக்குத்தான் இழிவு. ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவோம்.

அதிமுகவாக ஒன்றிணைவோம் என நான் சொல்லவில்லை. தீய சக்தி திமுகவை எதிர்த்து, ஓர் அணியில் கூட்டணியாக ஒன்றிணைவோம். மேலும் தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறோம். ஏப்ரல் இறுதிக்குள்ளாக மாவட்ட வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து, தேர்தல் பணியை வேகப்படுத்தி வருகிறோம். தேனி, ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இருக்கும் கள நிலவரங்களை ஆராய்ந்து வருகிறோம். திமுகவின் மந்திரிகள்தான் சூழ்ச்சி செய்து வருகிறார்கள். சொந்த செலவிலே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். அதேபோல் 1989ஆம் ஆண்டில் இருந்து அமைச்சராக இருக்கும் பொன்முடி பேசிய பேச்சு, காட்டுமிராண்டித்தனமாகவும் அனைத்து அரசியல்வாதிகளும் தலைகுனியும் அளவிலும் இருக்கிறது.

சுயநல நோக்கத்தோடுதான் திமுகவின் தொலைநோக்குத் திட்டங்கள் இருக்கிறதே தவிர, வேறு ஒன்றுமில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதார ரீதியாக பெரிய அளவில் அவர்கள் குடும்பம் வளர்க்கிறது. வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்கள் என பொய் பிரச்சாரத்தை ஏற்படுத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்தால் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம்” என தெரிவித்தார்.

முன்னதாக நேற்று (மார்ச் 7) விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அருங்குறிக்கையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “அப்படியே எனக்கு ஓட்டு கிழி கிழின்னு கிழிச்சுட்டீங்க...’ என்று தண்ணீர் பிரச்னை குறித்து பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கையின்போது பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "எனக்கு ஓட்டு கிழி கிழின்னு கிழிச்சிட்டீங்களா" மீண்டும் சர்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி!

Last Updated : Mar 8, 2023, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.