ETV Bharat / state

மக்களாட்சிக்கு மல்லுக்கட்டு...

author img

By

Published : Mar 6, 2021, 6:15 AM IST

தமிழ்நாடு அரசியல் களத்தை தகிக்க வைக்கும் வகையில் மக்களாட்சியின் அரியணைக்கு மல்லுக்கட்டும் ஜனநாயக போர் தீவிரமடையும் சூழலில் இனிவரும் ஒவ்வொரு நாளும் களத்தில் நடப்பவைகளை, தலைவர்களின் பேச்சுகளை ஈ டிவி பாரத் தமிழ் தொகுத்து வழங்கவுள்ளது.

மக்களாட்சிக்கு மல்லுக்கட்டு...
மக்களாட்சிக்கு மல்லுக்கட்டு...

பாமகவின் வளர்ச்சிமிகு தமிழகம்

அதோ இதோ என ஒருவழியாக அதிமுகவிடம் 23 சீட்டுகளை வாங்கிவிட்டது பாமக. இரண்டு பெரிய கட்சிகள் அமைதி காக்க பாமகவோ சீட்டுகளை வாங்கியவுடன் தேர்தல் அறிக்கையையும் தனியே வெளியிட்டுள்ளது. அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கிறார்.

60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் ஓய்வூதியம், மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை அனைவருக்கும் இலவச கல்வி அளிக்கப்படும். தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

பாமகவின் வளர்ச்சிமிகு தமிழகம்
பாமகவின் வளர்ச்சிமிகு தமிழகம்

அழகிரியை அழவைத்ததா அறிவாலயம்

அதிமுக முகாமில் தொகுதிப் பங்கீடு ஓரளவு சுமுகமாகப் போய்க்கொண்டிருக்க. திமுக முகாமில் காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடித்துவருகிறது. நாற்பதுக்கும் மேல் கையில் கொடுங்கள் என காங்கிரஸ் கேட்க, இருபதிலிருந்து 25 தான் என அறிவாலயம் அலற அந்த காட்சி நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸின் செயற்குழு கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், 41 சீட்டுகளுக்கு குறைவாக வாங்கிக்கொள்ள காங்கிரஸ் தயாரா, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு வந்ததா என்று செய்தியாளர்கள் கேட்க, எதையோ இழந்தது போன்ற, இல்லை இழக்கப்போவது போன்ற பாவனையுடன் தலையை இல்லையென அசைத்தார் கே.எஸ்.அழகிரி.

அதுமட்டுமின்றி, இன்று நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அவர் கண் கலங்கியதாகவும் சத்தியமூர்த்தி பவனிலிருந்து தகவல் கசிகிறது. குறைந்த சீட்டுகள் வாங்கினால் டெல்லிக்கு தன் மேல் அதிருப்தி எழும், கேட்கும் சீட்களைத் தர அறிவாலயம் மறுக்கிறது. என்ன செய்யலாம் என்ற குழப்பத்திலேயே அழகிரி நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்.

அழகிரியை அழவைத்ததா அறிவாலயம்
கண்கலங்கிய கே.எஸ்.அழகிரி

எண்ணிக்கை முக்கியமில்லை லட்சியம்தான் முக்கியம்

ஒருவழியாக திமுக முகாமில் நான்காவது கட்சியாக சீட்டுகளைப் பெற்றிருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. நேற்று விசிகவுக்கு ஆறு ஒதுக்கிய அறிவாலயம், இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆறு சீட்டுகளை ஒதுக்கியுள்ளது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், எண்ணிக்கை முக்கியமில்லை லட்சியமே முக்கியம் என்று முழங்கிவிட்டு சென்றார். ஆனால், ஆறு என்பது தோழர்களுக்கு ஆறாத வடுவை கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள் சிலர்.

எண்ணிக்கை முக்கியமில்லை லட்சியம்தான் முக்கியம்
எண்ணிக்கை முக்கியமில்லை லட்சியம்தான் முக்கியம்

மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை

தாயகத்திற்கும் அறிவாலயத்திற்கும் வைகோ பம்பரமாய் சுழன்று கொண்டிருக்க திமுக - மதிமுக இடையே தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகவில்லை. இதனால், மதிமுக அறிவாலயத்திலிருந்து வெளியேறி ஆழ்வார்ப்பேட்டையில் ஐக்கியமாகலாம் என்று தகவல் வெளியானது.

ஆனால், கமல் ஹாசன் தலைமையிலான மூன்றாவது அணிக்கு செல்ல வாய்ப்பில்லை என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் வைகோ. அறிவாலயமோ, ஆழ்வார்ப்பேட்டையோ எங்கிருந்தாலும் தொகுதி பேச்சுவார்த்தையை உடனே முடிக்க வேண்டுமென்பதுதான் அக்கட்சியினரின் எண்ணமாக இருக்கிறது.

மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை
மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை

என்னை யாராலையும் மிரட்ட முடியாது

சசிகலா சைலண்ட் மோடுக்கு சென்றுவிட டி.டி.வி.தினகரன் ஆக்டிவ் மோடிலேயே இருக்கிறார். எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டால் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய தயார் என்று டிடிவி பகீர் கிளப்ப ராயப்பேட்டையும், கமலாலயமும் ஆடித்தான் போனது.

இந்தச் சூழலில் சசிகலாவை இன்று சந்தித்த தினகரன், வருகிற 10 ஆம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிக்க உள்ளோம். நான் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்; என்னை யாரும் மிரட்ட முடியாது என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

என்னை யாராலையும் மிரட்ட முடியாது!
என்னை யாராலையும் மிரட்ட முடியாது!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.