ETV Bharat / state

சென்னையில் ஒரே நாளில் இரண்டு சிறுமிகள் தற்கொலை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 4:42 PM IST

Chennai Crime News: சென்னையில் நேற்று (செப்.27) நிகழ்ந்த குற்றச் சம்பவங்களைக் காணலாம்.
Chennai Crime News
சென்னை குற்றச்செய்திகள்

சென்னை: தாம்பரம், சோமங்கலம் பேருந்து நிலையம் அருகே தகுந்த கல்வித்தகுதி இல்லாமல் சம்பத் என்பவர் என்சி ஹெல்த் கேர் என்ற பெயரில் மருத்துவமனை வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் கோபிநாத்துக்கு இது குறித்து புகார்கள் வந்துள்ளது.

அந்த புகாரின் அடிப்படையில், நேற்று மருத்துவக் குழுவுடன் சோமங்கலத்தில் உள்ள என் சி ஹெல்த்கேர் மையத்தில் சோதனை செய்துள்ளனர். பின்னர் இது குறித்து சம்பத்திடம் விசாரணை மேற்கொண்டபோது, தகுந்த மருத்துவம் படிக்காமல் ஹோமியோபதி மருத்துவ முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் சம்பத்திடம் மருத்துவம் படித்ததற்கான முறையான சான்றிதழ் இல்லாததால், அவரை அழைத்துச் சென்று சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சோமங்கலம் போலீசார் சம்பத் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

11 வயது சிறுமி தற்கொலை: ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி - ஏகவல்லி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அவர்களது மகள் ஆர்.கே சாலையில் உள்ள தனியார் மகளிர் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கதவு வெகுநேரமாகியும் திறக்காத காரணத்தினால் சிறுமியின் சகோதரர் கதவைத் தட்டி உள்ளார். ஆனாலும் கதவு திறக்கவில்லை என்ற காரணத்தினால், அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சிறுமி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தற்கொலை தவிர்
தற்கொலை தவிர்

இந்நிலையில் சிறுமியின் தந்தை மற்றும் சித்தி கூறுகையில், "நன்றாக படிக்கின்ற மாணவி. அக்கம்பக்கத்தில் யார் என்ன வேலை சொன்னாலும் உடனடியாக செய்து முடிப்பார். நான்கு முறை விளையாட்டுப் போட்டிகளில் மெடல் வாங்கி உள்ளார்” என தெரிவித்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் போலீசார் சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

13 வயது சிறுமி தற்கொலை: அயனாவரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் வில்சன். அவரது மனைவி விஜயகுமாரி. இருவரும் சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். சிறுமி அயனாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் தாய், தந்தை ஆகியோர் நேற்று முன்தினம் வேலைக்குச் சென்று உள்ளனர். பிறகு சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அவரது உறவினர்கள் வில்சன் வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்துள்ளது. நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால், சந்தேகத்தில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சிறுமி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியை உடனடியாக மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இருந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் இது குறித்த தகவல் அறிந்து வந்த அயனாவரம் போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்பகை காரணமாக அரிவாள் வெட்டு: மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஏகாம்பரம் பிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர், ரஞ்சித்குமார். இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்திவிட்டு, தனது வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது, முன்பகை காரணமாக ரஞ்சித்தை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த ஹரி, அன்பு உள்ளிட்டோர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அரிவளால் வெட்டியதில் ரஞ்சித்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர் மீது அருகில் கிடந்த கல்லையும் தூக்கிப்போட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்த ரஞ்சித்தை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது இது குறித்து வழக்குப் பதிவு செய்த மயிலாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பட்டப்பகல்லில் எல்ஜேபி(R) தலைவர் அன்வர் கான் சுட்டுக்கொலை: உடலை காரில் வைத்து உறவினர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.