ETV Bharat / state

வீட்டு வாசலில் இருக்கும் பைக் சீட்டை கிழிக்கும் மர்ம நபர்.. போதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர்கள் உளிட்ட சென்னை குற்றச் செய்திகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 8:29 PM IST

Latest news on chennai crime: காவலர் வீட்டில் கைவரிசையை காட்டிய மர்ம நபர் சம்பவத்தில் இருந்து ஏடிஎம் இயந்திரத்தை மதுபோதையில் உடைத்த குற்றம் வரை இன்றைய சென்னை குற்றச் சம்பவங்களை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

சென்னையில் நடைபெற்ற இன்றைய குற்றச் சம்பவங்கள்
சென்னையில் நடைபெற்ற இன்றைய குற்றச் சம்பவங்கள்

சென்னை: போலீஸ் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையன்: திருவொற்றியூர் விம்கோ நகரைச் சேர்ந்தவர் செல்ல பாண்டியன். இவர் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சென்னை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் செல்லப்பாண்டி மட்டும் வீட்டிலிருந்தபோது கதவை மூடாமல் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து லாக்கரில் இருந்த மூன்று சவரன் தங்க நகை, 5 ஆயிரம் ரூபாய் பணம், செல் போன் மற்றும் பூஜை அறையில் உள்ள உண்டியல் உள்ளிட்டவை திருடிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து அவரது மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்நிலையில், விம்கோ நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னையில் இரவு நேரத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்களின் சீட்டை பிளேடால் கிழிக்கும் மர்ம நபர்: சென்னை ஐஸ் ஹவுஸ் யானைகுளம் பகுதியில் ஒன்றாவது தெரு மற்றும் இரண்டாவது தெருக்களில் குடியிருக்கும் மக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை வீட்டு வாசலில் நிறுத்துவது வழக்கம். இந்த நிலையில் இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் பிளேடு வைத்துக்கொண்டு அனைத்து இரு சக்கர வாகனத்தில் சீட்டுகளை பிளேடால் கிழித்து விட்டுச் சென்று உள்ளார்.

இதனைப் பார்த்த பகுதி மக்கள் சிலர் கூச்சலிட்டுள்ளனர். அப்போது அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் தனக்கு தானே பேசிக் கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்ததால், புகாரின் பேரில் காவல் துறையினர் சம்பவ இட்டத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது அந்த நபர் கையில் பிளேடை வைத்துக்கொண்டு அனைத்து இரு சக்கர வாகனத்தின் சீட்டுகளை கிழித்தது தெரியவந்தது. மேலும் அந்த நபர் உண்மையாகவே மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது போதையில் இருசக்கர வாகனத்தின் சீட்டுகளை கிழித்தாரா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த இருவர் கைது: சென்னை நந்தனம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான கட்டிடத்தின் கீழ் தளத்தில் கனரா வங்கியில் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. கடந்த 26 ஆம் தேதி அன்று இந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற இரண்டு மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை கையால் அடித்து உடைத்து உள்ளனர்.

இதனால் அலாரம் சத்தம் கேட்டு ஏடிஎம் மையத்தின் காவலாளி வருவதை பார்த்த, இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கிண்டியைச் சேர்ந்த கார்த்திகேயன், கிருபாகரன் ஆகிய இருவரை தேனாம்பேட்டை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணம் வராததால் குடிபோதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.