ETV Bharat / state

ஜூலை 25க்குள் பதிவுத்துறை அலுவலர்களின் சொத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

author img

By

Published : Jul 18, 2023, 8:25 AM IST

தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைத்து பத்திரப் பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள், தங்களது சொத்து அறிக்கையை வருகிற 25ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

திவுத்துறை அலுவலர்களின் சொத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவு
திவுத்துறை அலுவலர்களின் சொத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் பதிவுத்துறையில் பணியாற்றி வரும் சார்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள் உள்பட அனைத்து பதிவுத்துறை அலுவலர்களும் வருகிற 25ஆம் தேதிக்குள் தங்களது சொத்து அறிக்கையினை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்களில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், ஒரு பத்திரப்பதிவுக்கு ஆயிரம் தொடங்கி கோடிக்கணக்கில் லஞ்சம் பெறப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பதிவாளர் அலுவலங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து 70க்கும் மேற்பட்ட சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், தற்போது பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்களின் சொத்து அறிக்கை ஜூலை 25ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், “ஜூலை 17, 2023 அன்று சென்னை உயர் நீதிமன்றம் W.P. Nos. 2711 & 2719 of 2019 & 3177 of 2020 and W.M.P.No 3683 of 2020 Dated 17.07.2023 என்ற வழக்கில் பதிவுத்துறை தலைவர் ஆஜரானபோது சென்னை உயர் நீதிமன்றம் பதிவுத்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களின் சொத்து அறிக்கையைப் பெற்று சரி பார்க்க உத்தரவிட்டதற்கு இணங்க உரிய சுற்றறிக்கை ஜூலை 17 அன்று பிறப்பிக்கப்பட்டது.

அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 விதி 7(3)-ல் அரசுப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய சொத்து அறிக்கையினை ஒவ்வொரு 5 ஆண்டு கால இடைவெளியில் உரிய படிவத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அதன் உட்பிரிவு 7 (3) (a)-ல் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘தமக்கு முன்னோர் வழியாக கிடைத்த அல்லது தமக்கு சொந்தமான அல்லது குத்தகை அல்லது அடமானம் மூலம் தன்னுடைய அல்லது தன்னுடைய குடும்ப உறுப்பினரின் அல்லது மற்றொருவரின் பெயரில் உள்ள அசையாச் சொத்து.

அதற்கு மேல் உள்ள அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் (தாய், தந்தை, சகோதரர், சகோதரி, கணவர் அல்லது மனைவி, மகன், மகள் மற்றும் கணவர் அல்லது மனைவியின் தாய் - தந்தை மற்றும் சகோதரர் - சகோதரி) மற்றும் தொடர்புடைய நபர்கள் ஆகியோரது சொத்து அறிக்கையை ஆதார் எண் மற்றும் நிரந்தர கணக்கு எண் (PAN) ஆகியவற்றை இணைத்து ஒரு வாரத்திற்குள் சம்மந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர்கள் அல்லது துணைப்பதிவுத்துறை தலைவர்கள் ஆகியோருக்கு 25.07.2023க்குள் சமர்ப்பிக்க சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளது” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ED Raid: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... - பாடலில் பதில் சொன்ன அமைச்சர் துரைமுருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.