ETV Bharat / state

சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே செயல்படுத்த வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 12:37 PM IST

Ramadoss: மத்திய அரசுக்கு கடிதம் எழுதாமல், தமிழக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

tamil-nadu-government-should-implement-caste-wise-census-ramadoss-statement
சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக பிகார் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதாமல், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தும் என்று அறிவித்து, செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தேசிய அளவில் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

சமூகநீதியை நிலை நிறுத்தவும், வளர்ச்சியின் பயன்களை அடித்தட்டு மக்கள்வரை கொண்டு செல்லவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று ஒப்புக்கொண்டிருப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை நான் பாராட்டுகிறேன்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக பிகார் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பு மிகவும் விரிவாகவும், விளக்கமாகவும் இருப்பதால், அதனடிப்படையில் நடத்தப்பட்ட பிகார் சாதிவாரி கணக்கெடுப்பின் விபரங்களை வெளியிடவோ, அதனடிப்படையில் முடிவுகளை எடுக்கவோ தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது.

இவ்வளவுக்குப் பிறகும் மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் இருப்பதால், மத்திய அரசு நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்புதான் சட்டப்பூர்வமானதாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது மாநில அரசின் உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நான் மீண்டும், மீண்டும் கூறிக் கொள்வது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு. அதற்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை என்பதைத்தான். அந்த அதிகாரத்தை பயன்படுத்திதான் கர்நாடகம், பிகார், ஒடிஷா ஆகிய மாநிலங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளன.

ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. எனவே, இனியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதாமல், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தும் என்று அறிவித்து, முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்த வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.