ETV Bharat / state

"அமெரிக்கா சென்ற பிரதமரால் ஏன் மணிப்பூர் செல்ல முடியவில்லை?" - கே.எஸ். அழகிரி!

author img

By

Published : Jun 28, 2023, 6:04 PM IST

அமெரிக்கா செல்ல முடிந்த பிரதமர் மோடியால், பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்திற்கு ஏன் செல்ல முடியவில்லை? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

TN Congress
அமெரிக்கா

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருவதால், அவரை மாற்றும்படி தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தினர். அதன் காரணமாக தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவரை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஜோதிமணி, செல்லகுமார், மாணிக் தாகூர் ஆகியோர் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துப் பேசியுள்ளனர். அதேபோல், கே.எஸ்.அழகிரியும் டெல்லி சென்று மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து இன்று(ஜூன் 28) முற்பகலில் சென்னை திரும்பிய கே.எஸ். அழகிரி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார். மற்ற கட்சிகள் எல்லாம் நாட்டின் வளர்ச்சியைப் பற்றியும், நாட்டை வளர்ப்பது பற்றியும் தேர்தல் பரப்புரையில் சொன்னால், பிரதமர் மோடி பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவேன் என்று தன்னுடைய தேர்தல் பரப்புரையை ஆரம்பித்து இருக்கிறார்.

இந்த நாட்டில் ஒரே மதம் கிடையாது, ஒரே இனம் கிடையாது, ஒரே கலாசாரம் கிடையாது, ஒரே இறை வழிபாடு கிடையாது. நிறைய கலாசாரம், நிறைய மொழிகள் இருக்கின்றன. எனவே, பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவிற்கு பொருந்தாது. இந்தியாவுக்கு மட்டுமல்ல பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடுகளில் பொது சிவில் சட்டம் பொருந்தாது.

பிரதமர் தேசத்தின் பிரச்னைகளை விட்டுவிட்டு, இந்தப் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதில் கவனம் செலுத்தி இருக்கின்றார். காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற கட்சிகளும் இதனை சரியான விதத்தில் எதிர்ப்போம்" என்று கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஒரு அகில இந்திய கட்சியில் பொறுப்பு என்பது மாறக்கூடியதுதான். அதனால், அதைப் பற்றி பெரிதாகப் பேசுவதற்கு ஒன்றும் இல்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ராகுல் காந்தியைப் போன்ற ஒரு புரட்சியாளர், சீர்திருத்தவாதி எதற்கும் அஞ்சுவது கிடையாது. வன்முறையால் பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்திற்குப் பிரதமர் செல்லவில்லை. நாமாவது செல்வோமே என்பதற்காக ராகுல் காந்தி செல்கின்றார். பிரதமரால் அமெரிக்க செல்ல முடிகிறது. போபாலில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க செல்ல முடிகின்றது. ஆனால், மணிப்பூர் சென்று அமைதியை நிலைநாட்ட முடியவில்லை.

நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பாக ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். வந்தே பாரத் ரயிலை ஒரு ஸ்டேஷன் மாஸ்டரால் தொடங்கி வைக்க முடியும். ஆனால் மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை பிரதமரால் மட்டுமே அடக்க முடியும். ஆகவே, செய்ய வேண்டியதை செய்யாமல் தேவையற்றதை செய்து கொண்டிருக்கிறீர்களே இது நியாயமா? என கேள்வி கேட்டுள்ளார். இதுதான் அற்புதமான கேள்வி. நாட்டில் இந்த வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளில் பொருள் கொண்ட கேள்வி இது, இதற்குப் பிரதமர் பதில் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: Uniform Civil Code: பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடியின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.