ETV Bharat / state

பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய கடைசி தேதி அறிவிப்பு!

author img

By

Published : Nov 9, 2021, 3:23 PM IST

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்

சென்னை: நடப்பு ஆண்டில் சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிரை சாகுபடி செய்த விவசாயிகள் உடனடியாக பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை, 5.65 லட்சம் விவசாயிகள் பயிர்க்காப்பீடு பதிவு செய்து, 6.91 லட்சம் ஏக்கர் பயிர் பரப்பு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு வரும் நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

மேலும், கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு வரும் டிசம்பர் 15ஆம் தேதி கடைசி நாளாகும்.

வடகிழக்குப் பருவ மழை... தேவை பயிர்க் காப்பீடு

தற்போது தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்குப் பருவ மழை காரணமாக, பரவலாக மழை பெய்து வரக்கூடிய நிலையில், நெற்பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது.

எனவே, பயிர்க்காப்பீடு செய்யாத விவசாயிகள் அனைவரும் உடனடியாக வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகப் பதிவு செய்து கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது.

காப்பீடு செய்ய என்னனென்ன தேவை


காப்பீடு செய்யும் போது , முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், விவசாயிகளின் பங்களிப்பாக செலுத்தப்படும் பயிர் காப்பீட்டுத்தொகையில் 1.5 விழுக்காடு தொகை ஆகியவை தேவை.

மேலும் விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் விரைந்து காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் அல்லது வங்கிகளையோ அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது " என்றார் .

இதையும் படிங்க: தடுப்பூசி போடவில்லை என்றால் சம்பளம் இல்லை - மாநகராட்சி நிர்வாகம் கெடுபிடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.