ETV Bharat / state

பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும்: ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர்  வலியுறுத்தல்!

author img

By

Published : Sep 29, 2020, 11:07 AM IST

சென்னை: டெல்லியில் ஆம் ஆத்மி அரசு செய்தது போல் தமிழ்நாட்டிலும் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

வசீகரன்
வசீகரன்

தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இந்தியாவில் கல்வி தரத்தில் முதலிடம் வகிக்கும் டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசு சமீபத்தில் டெல்லி மாநில சட்டசபையில் சிறப்பு கூட்டத்தை கூட்டி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி வழங்குவதற்கான மசோதா ஒன்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில், முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த காலத்தில் அதாவது 2012 மார்ச் மாதம் தொகுப்பூதியம் அடிப்படையில் 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட இவர்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொகுப்பூதிய தற்காலிக ஆசிரியர்களாகவே பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணியில் அமர்த்தப்பட்ட போது 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக இவர்களுக்கு இருந்தது. பின்னர் ஊதிய உயர்வாக ரூபாய் 2 ஆயிரம் அதிகரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து 2014ல் உயர்த்தப்பட்டு பின்னர் ரூபாய் 700 அதிகப்படுத்தப்பட்டு தற்பொழுது ரூபாய் 7, 700 இவர்களுக்கு தொகுப்பூதியமாக தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இது தமிழ்நாடு அரசு நிர்ணயத்துள்ள தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலித் தொகையை விட குறைவானது. ஆனால் படித்து பட்டம் பெற்று ஆசிரியர்களாக வருபவர்களுக்கு ரூபாய் 7, 700 மட்டுமே வழங்கபடுகிறது என்பது வினோதமாக உள்ளது.

இவ்வளவு குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்கள் பணி செய்வது என்பது மிகவும் சிரமமானதாகும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும் இதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும்.

ஆகவே தமிழ்நாடு கல்வித்துறை இனியும் தாமதிக்காமல் ரூபாய் 7, 700 மட்டுமே பெற்றுக்கொண்டு கடந்த 9 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் அனைவரையும் நிரந்தர பணி ஆசிரியர்களாக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும்.

பகுதி நேர ஆசிரியர்கள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை எடுத்து வைத்த போது அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய மூன்று மாதத்திற்குள் ஒரு குழு ஆரம்பித்து அதற்கான தீர்வு காணப்படும் என்று 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர்களிடம் அமைச்சர் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆனால் இதுவரை பள்ளிக்கல்வித்துறை எந்த ஒரு முடிவும் இது சார்பாக எடுத்ததாக தெரியவில்லை.

புது டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர சட்டம் நிறைவேற்றி 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை மாணவர்களின் நலன் கருதி பணி நிரந்தரம் செய்தது போல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் கூட்டத்தொடரிலேயே ஒரு அவசர சட்ட மசோதாவை நிறைவேற்றி வாழ்வதற்கே அவதிப்படும் தற்போதுள்ள பகுதிநேர ஒப்பந்த ஊதிய ஆசிரியர்களை நிரந்தர பணி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.