ETV Bharat / state

வேங்கை வயல் விவகாரம்: குற்றவாளிகளை விரைந்து கண்டு பிடிக்க வேண்டும்... திருமாவளவன் கோரிக்கை

author img

By

Published : Apr 12, 2023, 9:08 AM IST

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் விழிப்புணர்வு, கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Thirumavalavan
திருமாவளவன்

சென்னை: தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10 ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் "மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்" (State Level Vigilance and Monitoring) நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அனைவரும் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை கூறியதாவது, “இன்று நடந்த ஆதிதிராவிடர் பழங்குடியின நலத்துறை கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதலமைச்சர், கடந்த கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என எடுத்துரைத்தார். பின்னர் இளைய பெருமாள் நூற்றாண்டு விழா எடுக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தி உள்ளோம்.

வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுபடுத்த வேண்டும். அதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் காங்கிரஸ் சார்பில் ஆதி திராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையுடன் இணைப்பதில் சிலருக்கு ஐயப்பாடுகள் உள்ளது என தெரிவித்துள்ளோம். ஆகையால் அதை தெளிவுபடுத்த வேண்டும். ஜோதி பாபு, நாராயண குரு போன்ற சமூக நீதிக்கான தலைவர்களின் புத்தகங்களை தமிழாக்கம் செய்ய வேண்டும். அவர்களை பற்றி தமிழ்நாட்டில் தெரியப்படுத்த வேண்டும்" என்ற கோரிக்கையும் வைத்துள்ளதாக செல்வபெருந்தகை கூறினார்.

திருமாவளவன் பேசியதாவது, “வேங்கை வயல் விவகாரத்தில் காலம் தாழ்த்த கூடாது. அது சமூக நீதி அரசுக்கு அழகல்ல என்பதை கூட்டத்தில் சுட்டிக்காட்டி உள்ளதாக கூறினார். பஞ்சமி நிலத்தை கண்டறிய கலைஞர் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணையத்தை புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும், விழுப்புரம், தென்னாற்காடு மாவட்டத்தில் இருளர், குறவர் சமுதாயத்தினர் மீது பொய், திருட்டு வழக்கு போடப்படுவதை கை விட வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்” என தெரிவித்தார்.

மேலும், “தற்போது காவல்துறையிடம் தலித் எதிர்ப்பு உளவியல் மேலோங்கி உள்ளது என்றார். கள்ளகுறிஞ்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தன் உதவியாளரை காலணிகளை எடுத்து தர சொல்லியது குறித்த கேள்விக்கு, மாவட்ட ஆட்சியருக்கும் சமத்துவம், மனித மாண்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம் முன்பு அம்பேத்கர் சிலை நிறுவப்பட வேண்டும் என்று விசிக கோரிக்கை வைத்து வருகிறது.

இதைத் தொடர்ந்து வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கண்டு பிடிக்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம் என கூறினார். மேலும் அம்பேத்கார் பிறந்தநாளை முன்னிட்டு தெலுங்கானாவில் நடைபெரும் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை” என திருமாவளவன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உதவியாளரை செருப்பு தூக்க வைத்த மாவட்ட ஆட்சியர் - வீடியோ வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.