ETV Bharat / state

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 34 பேரில் 30 பேர் உயர் சாதியினர் - திருமாவளவன்

author img

By

Published : Feb 11, 2023, 7:13 PM IST

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34ஆகும், அதில் 30 பேர் உயர் சாதியினர், 4 பேர் மட்டுமே விளிம்பு நிலை சமூகத்தினர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"உச்சநீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் அதில் 30பேர் உயர் சாதியினர்"- திருமாவளவன் விமர்சனம்
"உச்சநீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் அதில் 30பேர் உயர் சாதியினர்"- திருமாவளவன் விமர்சனம்

சென்னை: ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த நீதிபதிகள், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றங்களில் புறக்கணிக்கப்படுவது ஏன்? எனும் கேள்வி எழுப்பியும், சமூக நீதி கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், "உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றங்களிலும் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் இன்னும் போதவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34, அதில் 30 பேர் உயர் சாதியினர், 4 பேர் மட்டுமே விளிம்பு நிலை சமூகத்தை சார்ந்தவர்கள். இது எவ்வளவு பெரிய அநீதி?. பார்ப்பனர்களின் ஆதிக்கம் இன்னும் இங்கே இருக்கிறது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் திராவிட இயக்கத்தை விமர்சிப்பதை மட்டும் சிலர் தவறாமல் செய்து வருகின்றனர். எல்லா தளங்களிலும் உயர் சாதியினர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை நாம் உணர்ந்தால் மட்டும் போதாது, போராட வேண்டிய தேவையும் இருக்கிறது. சாதியின் பெயரால் இந்துக்களை பிளவுபடுத்துகிறார்கள், மதத்தின் பெயரால் இந்தியர்களை பிளவுபடுத்துகிறார்கள்.

அகில இந்திய அளவில் பொதுத்துறை நிறுவனங்களில் எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும் இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் இதுவரை ஒரு துறையில் கூட நூறு சதவீதம் இந்த இட ஒதுக்கீட்டை பின்பற்றி முழுமையாக நிரப்பியது இல்லை. தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டிய முக்கியமான காலத்தில் நாம் இருக்கிறோம். தமிழ்நாட்டை பாதுகாத்தால் மட்டுமே, இந்தியா முழுவதும் போராட முடியும்.

சங்பரிவார் சக்திகளை விரட்டி அடிக்க வேண்டும். அகில இந்திய அளவில் ஆட்சி பீடத்திலிருந்து அவர்களை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய கி.வீரமணி, "இன்று நாம் இவ்வாறு போராடுவதற்கு வெட்க பட வேண்டியவர்கள் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அல்லது அவர்களை நியமித்த அதிகாரம் படைத்தவர்கள்.

என் மீது வழக்கு போடட்டும் அனைத்தையும் பச்சையாக அம்பலப்படுத்துகிறேன். மனு நீதிக்கு முற்று புள்ளி வைக்கவில்லை என்றால் ஜனநாயகம் தழைக்குமா?. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீதி துறையில் இட ஒதுக்கீடு தேவை என்பது மிக முக்கியமானது. ஏனென்றால் நிர்வாகம் மற்றும் நாடாளுமன்ற துறைகள் எடுக்கும் முடிவுகளை சரியா? தவறா? என முடிவு செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உள்ளது.

இதுவரை நாம் எடுத்த போராட்டங்கள் தோற்றது இல்லை, வெற்றி கொஞ்சம் தள்ளி போகலாம் தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, "பயங்கரவாத இயக்கங்களை தனித்தனியாக நடத்தி வரும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ். வேறு எந்த அமைப்பும் இப்படி தடை செய்யப்படவில்லை. வெடி மருந்துகளை பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் எம்.பிக்களாக உள்ள வரலாறு உள்ளது.

இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் பேரணியால் மத கலவரங்கள் நடக்க வாய்ப்புள்ளதால் அதை தடை செய்ய அரசு முடிவு செய்கிறது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பு வேறுமாதிரியாக இருக்கிறது. ஆனால், இறுதி தீர்ப்பு மக்கள் தீர்ப்பு என்று 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க:2023-24 Budget: எகிறப்போகும் உணவுப்பொருட்களின் விலை - எச்சரிக்கும் ப.சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.