ETV Bharat / state

தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களில் உரிமை கோர முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!

author img

By

Published : Aug 16, 2023, 8:04 PM IST

அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை தனி நபர்களின் பெயர்களில் மாற்ற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த நெமிலியில் உள்ள தன்னுடைய சொத்துகளுக்கு ஆளவந்தார் அறக்கட்டளை பெயரில் பட்டா வழங்கப்பட்டு உள்ளதாக கூறி, அந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என கே.எம்.சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆளவந்தார் தனது சகோதரர் மகன் முத்துகிருஷ்ணனுக்கு எழுதிவைத்த சொத்துகளில் சிலவற்றை, அவரது உறவினரான தனக்கு எழுதிவைத்திருந்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அந்த சொத்துகளை ஆளவந்தார் அறக்கட்டளை பெயருக்கு அதன் நிர்வாகிகள் மாற்றிவிட்டதால், சொத்துக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரியிருக்கிறார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முத்துகிருஷ்ணனின் இறப்புச் சான்று போலியானது என்று கூறி, இதுதொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், ஆளவந்தாரால் கோவில்களுக்கு எழுதிவைக்கப்பட்ட சொத்துகளின் விவரங்களும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

முத்துகிருஷ்ணன் 1997ஆம் ஆண்டில் இறந்ததாக மனுதாரரும், 1936ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டதாக அரசு தரப்பிலும் கூறப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, எந்த இறப்பு சான்று உண்மையானது என கண்டறிவதற்காக, காவல்துறையிடம் புகார் அளிக்கும்படி உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், 1943ஆம் ஆண்டு முத்துக்கிருஷ்ணன் மகன் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, மனுதாரர் கே.எம்.சாமி தாக்கல் செய்த இறப்பு சான்று உண்மையாக இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

போலி சான்றை உருவாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்களை நிர்வகிப்பதற்கான மேலாளராகவே முத்துக்கிருஷ்ணன் நியமிக்கப்பட்டதாகவும், அவரது மறைவிற்கு பிறகு அந்த சொத்துகளை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமையில்லை என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அறக்கட்டளைக்காக தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை தனி நபர்களின் பெயர்களில் மாற்ற முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை கண்டறிந்து, அதிலுள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற நடவடிக்கையை நான்கு வாரங்களில் முடிக்க வேண்டுமென அறநிலையத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அறக்கட்டளை சொத்துகளில் இருந்து ஈட்டப்படும் வருமானத்தை, எந்த நோக்கத்திற்கான அறக்கட்டளை துவங்கப்பட்டதோ, அதற்காக செலவிட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ”மச்சான் நான் சாகப் போறேன் டா” என ரீல்ஸ் வெளியிட்டு கடலில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சோகம்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.