ETV Bharat / state

'என்ன மணி அடிச்சாலும் இனி ஈபிஎஸ் பப்பு வேகாது':பொங்கிய ஓபிஎஸ், மற்ற முக்கியப்புள்ளிகள் சொன்னது இதுதான்

author img

By

Published : Dec 21, 2022, 7:57 PM IST

அதிமுக ஓபிஎஸ் அணியால் கூட்டப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தலைவர்கள் அதிமுக குறித்து மேடையில் பேசினர்.

என்ன மணி அடிச்சாலும் இனி எடப்பாடி பப்பு வேகாது: ஓ.பன்னீர்செல்வம்
என்ன மணி அடிச்சாலும் இனி எடப்பாடி பப்பு வேகாது: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமித்த மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜேசிடி.பிரபாகரன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட 88 மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், "எம்.ஜி,ஆர் உழைப்போரே உயர்ந்தவர் என கையெழுத்திடுவார். அவ்வாறு உழைப்பவருக்கு தான் இந்த இயக்கம் சொந்தம். கம்பர் எழுதிய காப்பியத்தில் சிலர் இடைச்செருகலை நுழைப்பார்கள். அது பின்னர் அகற்றப்படும். அதுபோல இயக்கத்திலும் இடைச் செருகல் வந்துவிட்டது. காப்பியங்களில் இடைச் செருகல்கள் உருவாவது போல சிலர் (எடப்பாடி) இயக்கத்தில் நுழைந்துந்துள்ளனர். அவர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

3 காரணத்தால் பன்னீர் செல்வத்தை ஆதரிக்கிறேன். ஜெயலலிதா தன் வாழ்நாளில் அடையாளம் காட்டிய ஒரே வாரிசு, பன்னீர் செல்வம்தான். தான் செல்ல முடியாத இடங்களுக்கு, தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு, டெல்லி போன்ற இடங்களுக்கும் பன்னீர்செல்வத்தை தான் அனுப்புவார். அரசியல்வாதிக்கு நம்பகத்தன்மை அவசியம். பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா நம்பியது போல் மக்கள் நம்பலாம். இயக்கத்தை வழிநடத்த ஒருவருக்கு அடக்கம், பணிவு, துணிவு இருக்க வேண்டும். பன்னீர்செல்வத்திடம் துணிவுக்கு பஞ்சமே இல்லை.

எம்ஜிஆருக்கு எதிராக திமுகவில் பொதுக்குழு நடந்தபோது, திரைத்துறையில் இருக்கும் நிலையில் எம்ஜிஆர் முகத்தில் திராவகங்களை வீசி விடுவார்கள் என்று நாங்கள் கூறியதால், எம்ஜிஆர் அந்த கூட்டத்திற்குச் செல்லவில்லை, என்ன இருந்தாலும் மறவர் பரம்பரை ஓ.பன்னீர் செல்வம். ஏழைகளுக்கான கட்சி அதிமுக, அன்றாட கூலி வேலை செய்பவர்கள்தான் தங்களை அதிமுக என்று சொல்லுவர். தொண்டர்கள்தான் தனது அரசியல் வாரிசு என்றார், எம்ஜிஆர். எனவே தொண்டர்கள்தான் தலைமையை அங்கீகரிப்பார்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் தோல்வியைத் தழுவி இறுதி ஊர்வலத்தை நோக்கிப் போகிறது. என்னுடைய அரசியல் வாரிசுகள், தொண்டர்கள் என்றார் எம்ஜிஆர். உண்மையான அங்கீகாரம் தொண்டர்கள்தான் தருவார்கள். அதனைப் பெற நாம் தயாராக இருக்கிறோம்.

அனுபவ ரீதியில் சொல்வது, விஜயகாந்த் கூட்டணி பேசியபோது தேர்தல் முடிந்த பிறகு அம்மா முதலமைச்சர் ஆவார். விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆவார் என்றேன். என் வாய்முகூர்த்தம் பழித்தது. அதேபோல ஓபிஎஸ் தலைமையை தயார் படுத்திக்கொள்வோம்’’ என்றார்.

இதில் பேசிய மருது அழகுராஜ், "அதிமுகவுக்கு இரண்டாம் ராமச்சந்திரனாக வந்துள்ளவர், பண்ருட்டி ராமச்சந்திரன். அரசியல் மூத்தவர், அவைத்தலைவராக இருக்கிறார். பூட்டிய வாடி வாசலை திறந்து காட்டியவர் ஓ.பன்னீர்செல்வம். இவர் 2026-ல் முதலமைச்சராக மீண்டும் முடிசூட்டுவார். வனவாசம் சென்ற ராமனுக்கு முதுமை வரவில்லை. அதேபோல் ஓபிஎஸ் எந்த சூழ்நிலையிலும் எதற்கும் பதறியதில்லை. எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பவர்.

பொன்விழா காலத்தில் அதிமுகவை புண்விழாவாக மாற்றியவர், எடப்பாடி பழனிசாமி. கூட்டுவதற்கு வாளியோடு வந்து, விமானத்தில் குப்பை பெருக்குபவராக வந்தவர், எடப்பாடி பழனிசாமி. விமானத்தை ஓட்டுவது எப்படி என புத்தகத்தைப் படித்து பைலட்டாகி விமானத்தை ஓட்டிய அந்த குப்பை பெருக்குபவர், இறக்கை கட்டி பறந்தார். ஆனால், அவர் விமானத்தை இறக்கத் தெரியாமல் தத்தளிப்பது போல எடப்பாடி பழனிசாமி தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி பக்கம் டெண்டர் எடுத்தவர்கள் மட்டும் இருக்கிறார்கள். கே.பி.முனுசாமி உள்ளிட்ட 5 பேருக்கு வரம் கிடைத்தால் "ஜெயக்குமாரை ஊமையாக்கி விடு, சிவி சண்முகத்துக்கு நிதானத்தைக் கொடு, எடப்பாடியை ஏழையாக்கி விடு என்ற வரம் வேண்டும்’’ எனக்கேட்பேன்’ எனக் கூறினார்.

இதில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜலெட்சுமி, "கருணாநிதி குடும்பத்துக்கு ஆட்சி அமைக்க வழிவிட்டவர், எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் மட்டுமே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பகத்தன்மை வாய்ந்தவர். ஜெயலலிதா உருவாக்கிய அரசு கலைந்து விடக்கூடாது என்பதற்காகவே துணை முதலமைச்சராக தொடர்ந்தார். திமுக மீது இப்போதே மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது. அடுத்த ஆட்சி ஓபிஎஸ் தலைமையில் அமையும்" எனக் கூறினார்.

விழா மேடையில் பேசிய மனோஜ் பாண்டியன், "விசுவாசத்திற்கு அடையாளம் ஓ.பி.எஸ்., அதிமுகவுக்கு பிடித்து இருக்கிற நோய் எடப்பாடி, அதற்கு மருந்து ஓபிஎஸ். ஜானகி அம்மா விலகியதைப் போல நீங்களும் விலகி விடுங்கள் என்று கூறிய நய வஞ்சகர்கள் அவர்கள். இவன் எது செய்தாலும் நான் எதிர்த்து நிற்பேன் என்று அன்று பொதுக்குழு கூட்டத்தில் நின்றவர் ஓ.பி.எஸ். சோடா பாட்டில் தான் அரசியலை உருவாக்கும் என்று சொல்வார்கள். ஆனால், அன்று வாட்டர் பாட்டிலை வைத்து அரசியல் உருவாகியது. அதிமுகவை காப்பாற்றும் ஒரே தலைவர், ஓ.பி.எஸ் தான்.

எடப்பாடி பக்கம் உள்ளது டெண்டர் படை, ஓ.பி.எஸ் பக்கம் உள்ளவர்கள் தொண்டர் படை. ஓ.பி.எஸ் கட்டளையிட்டால் எடப்பாடி அணி என்று ஒன்று அங்கு இருக்காது. கூவத்தூரில் என்ன நடந்தது என்று விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதில் பேசிய ஜேசிடி பிரபாகரன், " எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டவிதியையே மாற்ற முயற்சிக்கிறார். சர்வாதிகாரமாக பொதுச்செயலாளராக தான் மட்டுமே அமர முயற்சிக்கிறார், எடப்பாடி. ஒன்றாக இருக்கும்போது ஒற்றை தலைமை பேராபத்தை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்தேன்.

14 ஆண்டுகள் காலம் பொருளாளராக இருந்த ஓபிஎஸ், பற்றாக்குறையில் இருந்த அதிமுகவை 236 கோடி ரூபாய் வருமானத்துடன் கையிருப்பு வைத்தவர், ஓபிஎஸ். ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சராக உருவாகும் வாய்ப்பை தடுத்து நிறுத்தினார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மெகா கூட்டணி அமைக்கும்" எனக் கூறினார்.

இதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், "எம்ஜிஆர் கணக்கு கேட்டபோது கவிஞர் கண்ணதாசன் ஆலோசனையை கேட்காமல் கருணாநிதி அவசரப்பட்டு எம்.ஜி.ஆரை நீக்கினார். அதன் பலனாக கருணாநிதி அரசியல் வனவாசம் சென்றார். அவசரப்பட்டு யார் தவறாக நடந்தாலும் அரசியல் வனவாசம் போய்விடுவார்கள். எடப்பாடி பழனிசாமி விரைவில் வனவாசம் சென்றுவிடுவார். சேலத்தில் தன்னை அரசியலுக்கு உருவாக்கியரை தலைமைக் கழக நிர்வாகி மகாலிங்கம் மூலம் ஜெயலலிதாவை சந்திக்கவிடாமல் துரோகம் செய்தவர், எடப்பாடி பழனிசாமி.

தவழ்ந்து போய் முதலமைச்சர் பதவி வாங்கி, சசிகலாவுக்கு துரோகம் செய்தார். டிடிவி தினகரனுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ்-க்கு துரோகம் செய்த சர்வாதிகாரி எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி நடத்தியது பொதுக்குழு அல்ல, பொய்க்குழு. ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு தான் இரட்டை இலைச் சின்னம். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தலைமை ஏற்போம். நன்றியை மறப்பதையே தொழிலாக கொண்டவர், எடப்பாடி பழனிசாமி.

சின்னம் முடக்கப்பட்டுவிட்டால் தனி மரம் ஆகி அரசியிலில் ஆனதை ஆகி விடுவார், எடப்பாடி பழனிசாமி. இப்போதே அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. வரும் 4ஆம் தேதி தர்மம் தான் வெல்லும். எடப்பாடி இடம் உள்ளவர்கள் எல்லாம் இன்று சோர்ந்து போய் உள்ளார்கள். எடப்பாடியை நீக்கி விட்டு கட்சியைக் காப்பாற்ற வேண்டும். கட்சியும் நம்மிடம் உள்ளது" எனக் கூறினார்.

விழா மேடையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர் ஆனேன். பல்வேறு சோதனைகளால் என்னை தாங்கி பிடித்துக்கொண்டிருக்கிறேன். நெருப்பில் பூத்த மலர், அதிமுக. லஞ்ச பேர்வழிகளை தோலுரித்துக் காட்டிய கட்சி. ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம், அதிமுக. எதிரிகளின் ஏளனங்களை தகர்த்து எம்ஜிஆர் 10 ஆண்டுகள் காலம் நல்லாட்சி தந்தார். அடுத்து ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை தாங்கி, கடுமையான தியாக உழைப்பால் இயக்கத்தை இரும்புக் கோட்டையாக மாற்றினார்.

அதிமுக பல நூறாண்டுகள் வாழும், மீண்டும் ஆட்சி செய்யும். ஜெயலலிதா தான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர். கூவத்தூரில் ஆரம்பித்து, இப்போது வரைக்கும் பணம்தான் விளையாடுகிறது. என்ன மணி அடித்தாலும் அவன் பப்பு வேகாது. அந்த மணி இந்த மணி எந்த மணி வந்தாலும் ஜனநாயக சக்தி தடுத்து நிறுத்தும். எங்கள் உயிர் போனாலும் எம்ஜிஆர் கொண்டு வந்த சட்டவிதியை மீற விடமாட்டோம். ஒற்றுமையாக இருக்க வேண்டாம் என சொல்லும் ஒரே ஒருவர் எடப்பாடி பழனிசாமி தான்.

எம்ஜிஆரை நேரில் பார்த்து பேசியிருப்பாரா எடப்பாடி பழனிசாமி. திட்டமிட்டு எனக்கு முன்னாடியே பொதுக்குழுவுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, என்னை தடுத்து நிறுத்திவிட்டு மாலை மரியாதை பெற்றுக்கொண்டிருந்தார். ஒரு காவல்துறை உதவி ஆணையர் தான், என்னை அழைத்துச் சென்றார். பொதுக்குழுவில் எனக்கு சிறிய மரியாதைகூட தரவில்லை.

சட்டமேதை (கூட்டத்தினர் சரக்கு சண்முகம் என்றனர்) சிவி சண்முகம் எழுந்து தீர்மானத்தை ரத்து செய்கிறோம் என்கிறார். அவருக்கு வலது கை விலங்காது போல் தெரிகிறது. அவர்கள் மீது சட்டவிதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தொண்டர்கள் உருவாக்கிய இயக்கத்தின் சட்டவிதியை மீறி, 30 ஆண்டுகள் கால ஆட்சிகள், பாதை மாறிப்போனால் ஊர்வந்து சேராது என்பார்கள்.

நான் தர்மயுத்தம் நடத்தியபோது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தேன். 36 பேர் டிடிவி தினகரன் வீட்டுக்கு சென்றுவிட்டனர். தங்கமணியும் வேலுமணியும் என் வீட்டுக்கு ஓடி வந்தார்கள். டிடிவி தினகரன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் ஆட்சி போய்விடும் எனக் கதறினார்கள். ரகசியத் தகவலின்படி 36 பேர் தற்போது 18 பேர் ஆகிவிட்டனர். நான் 11 பேருடன் ஆதரித்தால் அவர்கள் ஆட்சி போய்விடும். அடுத்தநாள் ஸ்டாலின் ஆட்சியை அமைத்துவிடுவார்.

இதனால் துணை முதலமைச்சர் பதவி டம்மி என்பது எனக்குத் தெரியும். வேறு வழியில்லாமல் தொடர்ந்தேன். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று தந்தேன், அதற்கு மோடிதான் காரணம். சின்னம்மாவிடம் என்னைப்பற்றி என்னென்னவோ சொல்லிப் பார்த்தார்கள். நான்கரை ஆண்டுகால ஆட்சிக்கு நான் ஏதாவது தடை செய்தேனா?. நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் தோற்றார்கள். நாங்கள் தேனியில் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என வெற்றி பெற்றோம். டீக்கடை நடத்திய ஓபிஎஸ்ஸை முதலமைச்சராக ஆக்கிய கட்சி, அதிமுக.

மற்ற கட்சிகளில் வாரிசுகள் தான் முதலமைச்சராகிறார்கள். முதலில் அமைச்சராகி முதலமைச்சராகிறார்கள். அம்மா அவர்கள் என்னை பதவி இறக்கியதும் இல்லை, பதவியை பிடுங்கியதும் இல்லை. ஜெயலலிதா கட்டிக் காத்த சட்டவிதியை கட்டிக் காப்பேன். நாங்கள் பணத்தை வைத்து மாவட்டச் செயலாளர்களை நியமிக்கவில்லை. இன்று உச்ச நீதிமன்றத்தில் தர்மயுத்தம் நடத்துகிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம். மறுபடியும் அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தினால் நாளை இயக்கத்துக்கு தலைமை தாங்குபவர் அதிமுகவின் தொண்டராகத் தான் இருப்பார். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். மறுபடியும் ஒற்றுமையாக செயல்படுவோம்" என கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய புகழேந்தி, "அதிமுகவின் பட்டா நிலம் ஓபிஎஸ். புறம்போக்கு எடப்பாடி பழனிசாமி. எடப்பாடிக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படும் என பண்ருட்டியார் கூறினார். அமைதியின் உருவம் என இருந்த ஓபிஎஸ் இன்று பொங்கி எழுந்தார். உயிர் போனாலும் சட்டவிதியை காப்பாற்றுவோம் என்றார். நாங்கள் உறுதுணையாக புதிய வார்ப்புகளாக செயல்படுவோம்" என கூறினார்.

இதையும் படிங்க: கும்பகோணம் மாநகராட்சி திமுக - காங். கவுன்சிலர்கள் இடையே மோதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.