ETV Bharat / state

கும்பகோணம் மாநகராட்சி திமுக - காங். கவுன்சிலர்கள் இடையே மோதல்!

author img

By

Published : Dec 21, 2022, 4:37 PM IST

கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக - காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

மேயர்
மேயர்

கும்பகோணம் மாநகராட்சி திமுக - காங். கவுன்சிலர்கள் இடையே மோதல்

தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம், மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் தமிழழகன், ஆணையர் செந்தில் முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மேற்கொள்ளப்பட இருந்த 64 விவாதங்கள் குறித்து அறிவிக்கத்தொடங்கியதும், மாநகராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னை, சாலை சீரமைப்பு, பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் பிரச்னைகள் தீர்ப்பது குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் சிறிது நேரம் அவை பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய மேயர் சரவணன், ’கடந்த 9-ஆம் தேதி துணை மேயர் தமிழழகனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டரில் மாநகராட்சியின் செயல்தலைவரே என அச்சடிக்கப்பட்டு உள்ளதாகவும், செயல் தலைவர் என்ற பதவி இல்லையே எப்படி போஸ்டர் ஒட்டப்பட்டது?’ எனக் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து வெகுண்டு எழுந்த திமுக உறுப்பினர்கள், மற்றும் துணை மேயர் தமிழழகன், 'இது சபைக்கு தொடர்பில்லாத விவகாரம் என்றும், அந்த சுவரொட்டியில், அரசு முத்திரைகள் எதுவும் அச்சடிக்கப்படவில்லை என்றும்' கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேயர் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவை சிறிது நேரம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இதனைத்தொடர்ந்து பேசிய துணை மேயர் தமிழழகன், மன்றத்தில் கூறிய கருத்துகளை மேயர் திரும்பப் பெற வேண்டும் என்றும்; இல்லையெனில் கூட்டத்தில் இருந்து வெளியேறுவதாகவும் கூறினார். மேலும் மேயர் எப்படி கூட்ட தீர்மானங்களை நிறைவேற்றுகிறார் என பார்ப்போம் என்றும் தமிழழகன் சவால் விடுத்தார்.

சக காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மேயர் சரவணனுக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில், தர்ம சங்கடத்திற்கு ஆளான மேயர் சரவணன், கூட்டத்தில் பேசிய கருத்துகளை திரும்பப் பெறுவதாக கூறினார். மேலும் கூட்டத்தில் விவாதப் பொருட்களை மாமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றித் தர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே தொடர்ந்து பேசிய துணை மேயர் தமிழழகன், தனக்குப் பதவி பெரியதல்ல என்றும்; கட்சிக் கொள்கைக்கும், கட்சித் தலைவரின் வார்த்தைக்கும் கட்டுப்பட்டவன் என்றும் தெரிவித்தார். துணை மேயர் பணியேற்ற பின், மேயருடன் முதன் முறையாக தலைவரை சந்திக்கச்சென்ற போது, ’என்னிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ், என் மீது வருத்தமா’ என கேள்வி கேட்டதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ஹேப்பி நியூஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.