ETV Bharat / state

ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது.. தி குரூப் நிறுவனம் விளக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 10:58 PM IST

Etv Bharat
Etv Bharat

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது என தி குரூப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து தி குரூப் நிறுவனம் விளக்கம் அளிக்கத்துள்ளது. அதில், “2018ஆம் ஆண்டு "ASICON 2018 Chennai" என்ற மூன்று நாள் நிகழ்வுக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி மற்றும் வேறு சில நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டார்கள்.

நாங்கள் ஏ.ஆர். ரஹ்மானிடம் பேசி அனுமதி பெற்றோம். இதன்பின் நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தோம். அப்போது ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்காக அவரின் பெயரில் 25 லட்சம் ரூபாய் காசோலை, வேறு நிகழ்ச்சிக்காக 25 லட்சம் ரூபாய் காசோலை என இரண்டு காசோலைகளை அந்த அமைப்பினர் வழங்கினார்கள்.

அந்த சமயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீங்களாகவே (சம்மந்தப்பட்ட அமைப்பு) நிகழ்ச்சிகளை நிறுத்தினால் அல்லது ரத்து செய்தால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் முன் பணம் திரும்பி தரப்படாது என குறிப்பிட்டு இருந்தோம். அதன் அடிப்படையில் நிகழ்ச்சியை அவர்கள் ரத்து செய்தால் முன்பணம் திரும்பி வழங்க தேவையில்லை என்ற நிபந்தனை உட்பட அனைத்து விஷயங்களும் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டு கையெழுத்தானது.

"ASICON 2018 CHENNAI" நிகழ்வில் அதிக தொகை செலவிட இருந்ததால் இசை நிகழ்ச்சியை அந்த அமைப்பால் நடத்த முடியாத சூழலல் ஏற்பட்டது. எனவே அவர்கள் இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இருந்த போதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் வழங்கப்பட்ட 25 லட்சம் காசோலை அந்த அமைப்புக்கு திருப்பி வழங்கப்பட்டுவிட்டது.

அந்த அமைப்பினரே இசை நிகழ்ச்சி ரத்து செய்த நிலையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் வழங்கப்பட்ட காசோலை திருப்பி வழங்கப்பட்டுவிட்டது. இதனால் ஏ.ஆர். ரஹ்மானுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த நிலையில் தேவையில்லாமல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை இந்த புகாரில் இணைத்துள்ளனர். அவருக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.

அந்த அமைப்பினர் காசோலை கொடுத்ததாக குறிப்பிடுவது வேறு நிகழ்ச்சிக்கானது. ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட முன் தொகை திருப்பி வழங்க தேவையில்லை. எங்கள் நிறுவனத்தின் (The Group) மீது கொடுக்கப்பட்டிருக்கும் புகாரை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். மேலும், அந்த அசோசியேஷன் மீது நாங்கள் வழக்கு தொடர்வோம்” என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் மீது இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.