ETV Bharat / state

தீண்டாமை ஒழிப்பிற்கான முதல் கணை.. வைக்கம் போராட்டமும், பெரியாரின் பங்களிப்பும்!

author img

By

Published : Mar 31, 2023, 10:43 PM IST

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கும் நிலையில் வைக்கம் போராட்டம் மற்றும் அதில் தந்தை பெரியாரின் பங்கு என்ன என்பது குறித்து விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு...

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வைக்கம் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

இந்தியாவையே உலுக்கிய மாபெரும் சமூக சீர்திருத்தத்திற்கு அடையாளமாகவும், தீண்டாமை ஒழிப்பிற்கு முக்கியமாகவும் விளங்கியது, வைக்கம் போராட்டம். 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி, அதாவது 100 ஆண்டிற்கு முன்பு இதே நாளில் வைக்கம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்பு, கேரள மாநிலம், திருவாங்கூர் சமஸ்தானத்தில் அமைந்துள்ள வைக்கம் என்ற கிராமத்தில் சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடப்பதற்குப் பல ஆண்டுகளாக தடை இருந்து வந்தது.

இதற்காக அப்போதைய காங்கிரஸ் கட்சியின் கேரள தலைவராக இருந்த டி.கே.மாதவன், இந்த நடைமுறையை எதிர்த்து ஆதரவளித்த நபர்களை ஒன்றிணைத்து ஆலய நுழைவு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார். இந்தப் போராட்டம் 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி காலை 6 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இது காவல்துறைக்கு தெரிந்தபோது போராட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.

தடையை மீறி போராட்ட நடத்த திட்டமிட்டதால் குஞ்ஞப்பி, பாகுலேயன், கோவிந்தப் பணிக்கர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களுக்கு ஆதரவுத் திரட்டி மேலும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தில் மகாத்மா காந்தியை சந்தித்து டி.கே.மாதவன் ''வைக்கம்'' கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வை எடுத்துக் கூறி ஆதரவு திரட்டினார்.

அதன் பிறகு கே.பி.கேசவமேனோன், டி.கே.மாதவன் ஆகியோர் காவல் துறையினரின் தடுப்பைத் தாண்டி சென்று போராட்டம் நடத்தியதற்காக அவர்களுக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனையும், ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதற்குப் பின்னர் தாழ்த்தப்பட்ட மக்களை இணைத்துக் கொண்டு அறவழிப் போராட்டத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர். ஒரு கட்டத்தில் வன்முறையாளர்கள், காவல்துறையினரின் உதவியோடு அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் மக்களை அடித்து துன்புறுத்தினர்.

படிப்படியாக போராட்டக்களத்தில் இருந்த முக்கியத் தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால், போராட்டம் ஒரு கட்டத்தில் தொய்வு நிலை அடைந்தது. இந்த நிலையை அறிந்து கொண்ட ஜார்ஜ் ஜோசப், கேசவமேனன் ஆகியோர் இணைந்து தமிழ்நாட்டில் இருக்கும் தந்தை பெரியாருக்கு கடிதம் ஒன்று எழுதினர்.

அந்த கடிதத்தில், "முக்கியமான தலைவர்களை காவல் துறையினர் கைது செய்துவிட்டனர். தற்போது போராட்டத்தை கைவிட்டால் மன்னிப்பு கேட்கும் நிலைமை ஏற்படும். நீங்கள் எப்படியாவது இங்கே வந்து இந்தப் போராட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இதனை அறிந்த தந்தை பெரியார் உடனடியாக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வைக்கத்திற்கு வந்தார்.

தந்தை பெரியார் தனக்கான பாணியில், சூடு பறக்கும் சொற்களால் மக்களைத் தீண்டாமைக் கொடுமைக்கெதிராகத் தட்டியெழுப்பினார். தந்தை பெரியாரின் சமூக நீதி கருத்துகளும், தீண்டாமைக்கு எதிரான கருத்துகளும் மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தந்தை பெரியாரின் பேச்சுகளை கவனிக்கத் தொடங்கிய காவல்துறையினர் ஒரு கட்டத்தில் அவரையும் கைது செய்து ஒரு மாதம் சிறையில் அடைந்தனர். பின்னர் விடுதலையான தந்தை பெரியார் மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்தார். மீண்டும் ஒரு வாரம் கழித்து பெரியாரை கைது செய்து 6 மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதித்தனர்.

இதற்கிடையில் பெரியாரின் மனைவி நாகம்மாள், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர். தந்தை பெரியார் சிறையில் 4 மாதத்தில் இருக்கும்போது திருவாங்கூர் அரசர், உயிரிழந்ததால் பெரியார் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் தந்தைப் பெரியார் ஈரோடு திரும்பினார்.

தொடர்ந்து போராட்டதை முன்னெடுத்த கேரள காங்கிரஸ் தலைவர் டி.கே.மாதவன் 1925ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மகாத்மா காந்தியுடன் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் பல்வேறு தலைவர்களின் தொடர் முன்னெடுப்பு காரணமாக 1925ஆம் ஆண்டு நவம்பர் மாதம் போராட்டம் வெற்றி பெற்று, கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஈழவ மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அறவழியிலும், அகிம்சை வழியிலும் போராடி வெற்ற முதல் போராட்டம் வைக்கம் போராட்டமாகும். சாதிய தீண்டாமைக்கான மிக முக்கியமான போராட்டமான வைக்கம் போராட்டத்தில் இக்கட்டான சூழ்நிலையில் தனது பங்களிப்பை அளித்ததால் தந்தை பெரியாரை 'வைக்கம் வீரர்' என்று அழைத்தனர்.

100 ஆண்டுகள் கழித்து வைக்கம் போராட்டத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் விதமாக, தமிழ்நாடு அரசு பல முன்னெடுப்புகளை எடுத்துள்ளது. தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்.17ஆம் தேதி 'வைக்கம் விருது' வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைக்கம் போராட்டத்தின் பெரியாரின் பங்களிப்பு குறித்து ஆய்வாளர் பழ.அதியமான் எழுதிய புத்தகம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்க இருக்கிறது.

தீண்டாமை ஒழிப்பிற்கான முதல் போராட்டம்..! 'வைக்கம் வீரர்' பெரியாரின் பங்களிப்பும்..!
தீண்டாமை ஒழிப்பிற்கான முதல் கணை.. வைக்கம் போராட்டமும், பெரியாரின் பங்களிப்பும்!

பெரியார் நினைவகத்தில் கூடுதல் பொருட்கள் அமைக்க ரூ.8.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெரியார் சிறையில் இருந்த அருவிக்குட்டியில், புதிய பெரியார் சிலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்பிற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ரயில் நிலையப்பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துகளில் அடிக்கப்பட்ட கறுப்பு ஸ்பிரே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.