ETV Bharat / state

'திமுக ஆட்சியும் தெளிவில்லை, அமைச்சர்களும் தெளிவாக இல்லை' - ஜெயக்குமார் அதிருப்தி!

author img

By

Published : Oct 2, 2022, 4:05 PM IST

'திமுக ஆட்சியும் தெளிவில்லை, அமைச்சர்களும் தெளிவாக இல்லை. முதலமைச்சர், அமைச்சர்கள் தான் குழப்பத்தில் இருக்கிறார்கள் என நினைத்தால், அலுவலர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள்' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியும் தெளிவில்லை, அமைச்சர்களும் தெளிவாக இல்லை- ஜெயக்குமார் அதிருப்தி!
திமுக ஆட்சியும் தெளிவில்லை, அமைச்சர்களும் தெளிவாக இல்லை- ஜெயக்குமார் அதிருப்தி!

சென்னை: காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "திமுக அரசு குழப்பத்தின் உச்சியில் உள்ளது. காந்தியின் பிறந்த நாள் விழாவில் கூட திமுக அரசு குழப்பத்தில் உள்ளது. காந்தியின் பிறந்தநாள் 153ஆவது பிறந்தநாள் என மத்திய அரசு தெரிவித்துள்ள போது, திமுக அரசு 154ஆவது பிறந்தநாள் என விளம்பரப்படுத்தியுள்ளது. ஆட்சியும் தெளிவில்லை, அமைச்சர்களும் தெளிவாக இல்லை.

முதலமைச்சர், அமைச்சர்கள் தான் குழப்பத்தில் இருக்கிறார்கள் என நினைத்தால், அலுவலர்களும் குழப்பத்தில் இருப்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது.

அமைச்சர்களின் அலப்பறைகள் என்ற புத்தகமே எழுதக்கூடிய நிலை உள்ளது. இதனால் மக்கள் முகம் சுளிக்கின்ற அளவுக்கு ஏளனம் செய்யக்கூடிய நிலையில் திமுக அமைச்சர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்தை எதிர் அணியினர் திரித்து அவருடைய கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். அற்ப சந்தோஷத்திற்காக இதனை செய்து வருகிறார்கள். எங்களுக்கு எந்த வகையிலும் இது பின்னடைவு இல்லை. இதையெல்லாம் தொண்டர்கள் நம்ப மட்டார்கள்.

சசிகலாவுடன் நீங்கள் வேண்டுமானால் போய் சேர்ந்துகொள்ளுங்கள். அதிமுக தொண்டர் ஒருவர் கூட சேர மாட்டார்கள். சசிகலா வேண்டுமானால் தன் வாழ்நாள் முழுவதும் அந்த கருத்தைச்சொல்லி வரலாம். ஆனால் அதிமுக தொண்டர் ஒருவர் கூட அவருடன் செல்ல மாட்டார்.

காமராஜரை களங்கம்படுத்தும் நோக்கில், அவருக்கே நினைவிடம் கட்டியது நாங்கள் தான் என திமுகவினர் கூறுகிறார்கள். அப்படியே நினைவிடம் கட்டினாலும் எங்கு கட்டினீர்கள்? கருணாநிதிக்கு மட்டும் கடற்கரையில் கட்டிவிட்டு காமராஜருக்கு கிண்டியில் கட்டினீர்கள்.

அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி, உண்மையிலேயே காமராஜர் மீது மதிப்பு வைத்திருந்தால் கடற்கரையில் இடம் ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால், முன்னாள் முதலமைச்சருக்கு எல்லாம் இடம் ஒதுக்க முடியாது எனச்சொன்னவர் கருணாநிதி. இன்று நினைவிடம் கட்டியதைக்கூட சொல்லிக்காட்டும் அளவுக்கு சிறுமை புத்தியுள்ளவர்கள் தான் திமுகவினர்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:தீபாவளிக்கு ரூ.175 கோடிக்கு கைத்தறித் துணிகள் விற்க இலக்கு - அமைச்சர் காந்தி தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.