ETV Bharat / state

இனி தனியார் பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை புத்தகம், கல்வி உபகரணங்கள் தருவோம் - பள்ளி கல்வித்துறை

author img

By

Published : Mar 31, 2023, 7:33 PM IST

1 முதல் 10ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளான புத்தகம், கல்வி உபகரணங்கள், நோட்டுப் புத்தகம், புத்தகப்பை போன்றவை வழங்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறித்துள்ளது.

இனி தனியார் பள்ளிகளிலும் அரசின் நலதிட்ட உதவிகள்
இனி தனியார் பள்ளிகளிலும் அரசின் நலதிட்ட உதவிகள்

சென்னை: பள்ளிக்கல்வித்துறையின் மானியக்கோரிக்கையின்போது அளிக்கப்பட்ட கொள்கை விளக்கக்குறிப்பில், ''தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உபகரணங்கள், பாடநூல், நோட்டுப்புத்தகங்கள், புத்தகப்பை மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் மேலும் அரசு நிதி உதவி இல்லாமல் செயல்படும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பாடங்களை பயிலும் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.2.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக 47,661 மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் புத்தகப்பை மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து 2023-2024ஆம் கல்வியாண்டில் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 1,556 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளைப் பராமரிப்பதற்கான நிதி 30 கோடியில் இருந்து 150 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி கட்டடங்கள், கூடுதல் வகுப்பறைகள், கணினி அறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் எனப் பல வசதிகளை மேம்படுத்த 1,156 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாதிரிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் பற்றி ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்த 2023-2024ஆம் கல்வியாண்டில் கூடுதலாக 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக 33.56 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ''நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி'' திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டில் 68.47 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்திற்காக ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் இடைநிற்றலுக்கான வாய்ப்பு உள்ள மாணவர்களை கண்டறியும் வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை உருவாக்கியுள்ளது. இதன் அடிப்படையில் சிறப்பு கைப்பேசி செயலியின் மூலம் வீடு வீடாக கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக் கல்வியின் மாநில அலுவலகத்தில் உள்ள கோப்புகளை விரைவாக கையாளும் வகையில் அலுவலக நடைமுறைகள் e-office மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறை மூலம் அரசு ஆணைகளை வழங்குதல் மற்றும் முன்னுரிமை திட்டங்களுக்கான நிர்வாக அனுமதிகளை பெறுதல், மேலும் பொது கோரிக்கைகளுக்கான அலுவலக செயலாக்கம் கொண்ட நடவடிக்கைகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் விரைவாக முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2022-23ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்புக்கான சீரமைக்கப்பட்ட தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறை அறிவியல் முறையில் தரவுகளை சேகரித்து சான்றுகளின் அடிப்படையில் நிர்வாக முடிவுகளை மேற்கொள்ள நவீன செயலி முறையை உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளது.

துறையின் முதன்மைச் செயலாளர் முதல் வட்டார கல்வி அலுவலர் வரை அனைத்து அலுவலர்களும் மாணவர்களின் கற்றல் நிலைகளை துல்லியமாக மதிப்பீடு செய்து கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளளது. இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கல்வித்துறை அலுவலர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆசிரியர்களின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசுத் தேர்வுத்துறையில் உயர்கல்வி அல்லது வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களின் நலனுக்காக மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மின்னணு சான்றிட்ட சான்றிதழ்களாக பெற்றிடும் வசதியை செய்துள்ளது. 2022-23ஆம் ஆண்டில் 579 மதிப்பெண் சான்றிதழ்களுக்கு மின்னணு சான்று அளிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிகளில் போட்டித் தேர்வு மையம், ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வுகளைத் திட்டமிட்டப்படி நடத்திட அரசுப்பள்ளிகளில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கம்ப்யூட்டர் ஆய்வகம் அமைக்கப்படும்.

பள்ளித்தேர்வுகள் நடைபெறாத காலங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பள்ளி கம்ப்யூட்டர் ஆய்வகங்களை போட்டித் தேர்வுகளுக்கு பயன்படுத்திட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது'' என பள்ளிகல்வி துறை சார்பில் பல திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடப்பு கல்வியாண்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளின் பாடத்திட்டம் மாற்றம்.. காரணம் என்ன.?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.