ETV Bharat / state

தீவுத்திடல் அருகே பூர்வக்குடி மக்களை வெளியேற்றும் முயற்சியைக் கைவிடுக- சீமான்

author img

By

Published : Dec 11, 2020, 4:13 PM IST

சென்னை: தீவுத்திடல் அருகே சத்தியவாணி முத்துநகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்துவரும் பூர்வக்குடி மக்களை அம்மண்ணைவிட்டு வெளியேற்றுகிற முயற்சியைக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

The attempt to evict  people in Satyavani Muthunagar and Gandhi Nagar should be abandoned said seeman
The attempt to evict people in Satyavani Muthunagar and Gandhi Nagar should be abandoned said seeman

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை தீவுத்திடல் அருகே சத்தியவாணி முத்துநகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் மூன்றாயிரத்து 500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழர்களை தமிழக அரசு வெளியேற்ற அரசு முயற்சித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. எவ்வித முன்னறிவிப்புமின்றிக் காலங்காலமாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்விடங்களை இடித்துத் தரைமட்டமாக்கியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டின் தலைநகராக விளங்கும் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இடநெருக்கடியை சமாளிக்க ஒவ்வொரு முறையும் குடிசைப்பகுதியில், நீண்டகாலமாக வசிக்கின்ற ஏழை, எளிய தொல்குடி தமிழர்களை அவர்களின் வாழ்விடத்திலிருந்து தொடர்ச்சியாக வெளியேற்றுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

சென்னையில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வித தடையுமின்றி, பாதுகாப்பாக அனைத்து வசதிகளும் நிறைந்த நகரின் முக்கியப் பகுதிகளில் குடியேறி வாழ முடிகிறது. ஆட்சி, அதிகாரத்தைச் சேர்ந்தவர்களும், மேல்தட்டு வர்க்கத்தினரும் சென்னையின் நூற்றுக்கணக்கான நீர்நிலைகளையும், புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வசிப்பிடங்களில் எவ்வித அதிகார அச்சுறுத்தல்களுக்கு ஆளாகாமலும் நிலைத்து வாழ முடிகிறது.

ஆனால், எதிர்த்துக் கேள்விகேட்க அறியாத பாமரர்களாகிய குடிசைப்பகுதிகளில் வசிக்கும் பூர்வக்குடி தமிழர்களை மட்டும் எளிதாக விரட்டியடிப்பதும், அவர்களின் பூர்வீக இடத்திலிலிருந்து வெகுதூரத்தில், நகரத்திற்கு வெளியே துரத்தியடித்து வாழ்வாதாரத்தை அழித்தொழிப்பது என்பது அரச கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

‘ஸ்மார்ட் சிட்டி’ எனும் பெயரில் நவீன நகரங்களை உருவாக்க முனைபவர்கள் நவீன கிராமத்தை உருவாக்கி கிராமங்களிலேயே கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தந்து, நகரத்தை நோக்கி மக்கள் இடம்பெயர்வதைத் தடுக்காமல் விட்டதன் காரணமாகவே நகரம் பிதுங்கி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, சென்னை தீவுத்திடல் அருகே சத்தியவாணி முத்துநகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நெடுங்காலமாக வசித்துவரும் தொல்குடி தமிழர்களின் குடிசைகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றி, அவர்களை அப்புறப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே பாதுகாப்பான, நிரந்தர வசிப்பிடங்களை உருவாக்கித் தரவேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கூவம் கரைவாழ் மக்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.