ETV Bharat / state

இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" - தெலங்கானா அதிகாரிகள் பாராட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 10:30 PM IST

Telangana officials about TN Govt's Chief Minister's Breakfast scheme: தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ள “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை” தெலங்கானா அதிகாரிகள் பார்வையிட்டு, இத்திட்டமானது இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது என பாராட்டுகளை தெரிவித்தனர்.

breakfast scheme
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

சென்னை: கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக, 1,543 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

அடுத்த கட்டமாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள 18 லட்சம் மாணவர்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் செயல்படுத்த அம்மாநில அரசு ஆர்வம் கொண்டிருக்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசை தொடர்பு கொண்டு, தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நேரில் பார்வையிட அம்மாநில உயர் அலுவலர்கள் ஆர்வம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, தெலங்கானா மாநில அரசு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொண்டதன் பேரில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட தெலங்கானாவிலிருந்து மூத்த அரசு அதிகாரிகள் நேற்று (ஆகஸ்ட் 30) சென்னை வந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 31) மைய சமையல்கூடம் ஒன்றிற்கும், பல்வேறு பள்ளிகளுக்கும் சென்று பார்வையிட்டனர்.

முதலில், ராயபுரத்தில் இருக்கும் மாநகராட்சி பள்ளிக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் காலை உணவு தயார் செய்யும் மைய சமையல் கூடத்தை குழுவினர் பார்வையிட்டனர். அங்கு சமையல் பொருட்கள் பெறப்படும் விதம், பணியாளர்கள் பணியாற்றும் தன்மை, சுகாதாரமாக உணவு தயாரிக்கப்படும் முறை, தர பரிசோதனைகள் செய்யப்படும் விதம், தயாரிக்கப்பட்ட உணவு, வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் முறை, வாராந்திர உணவு அட்டவணை தொடர்பான ஒவ்வொன்றையும் பற்றி பணியாளர்களோடும், மாநில அலுவலர்களோடும் உரையாடி அறிந்து கொண்டனர்.

முன்னதாக, காலை 7 மணிக்கு பார்வையிடத் தொடங்கிய குழுவினர் 8 மணிக்கு மைய சமையல் கூடத்திலிருந்து புறப்பட்டு அருகில் இருக்கும் ஆரத்தூன் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி உருது தொடக்கப் பள்ளிக்குச் சென்று அங்கு உள்ள மாணவர்களுக்கு உணவு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை பார்வையிட்டனர். பின்னர், மாணவர்களோடு உரையாடி மாணவர்களின் கருத்துகளையும் அறிந்து கொண்டனர்.

பின்னர் திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்குச் சென்ற குழுவினர், அங்கே கிராமப்புற பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் இந்த திட்டம் எப்படி சீரிய முறையில் செயல்படுத்தப்படுகிறது என்பதையும், நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சவால்களை தமிழ்நாடு அரசு எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதையும் அரசு அலுவலர்களிடமும், ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் உரையாடி தெரிந்து கொண்டனர்.

மேலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் க.இளம்பகவத் தெலங்கானா மாநில அரசு அதிகாரிகள் குழுவோடு சென்று, அவர்களுக்கு வேண்டிய தகவல்களைத் தந்து இத்திட்ட செயல்பாடுகளையும் விளக்கினார். சமூகநலத்துறை கூடுதல் ஆணையர் கார்த்திகா, சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் திரு. சிவகுரு பிரபாகரன், திருவள்ளுவர் கூடுதல் ஆட்சியர் திரு.சுகபுத்திரா ஆகியோர் உடன் இருந்தனர்.

இத்திட்டத்தின் செயல்பாடுகளை நேரில் கண்ட தெலங்கானா மாநிலத்தின் அரசு அதிகாரிகள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை பற்றியும் அது செயல்படுத்தப்படும் விதம் குறித்தும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை பார்வையிட்ட தெலங்கானா மாநில அரசு அதிகாரிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.