ETV Bharat / state

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை உபயோகிப்பது குற்றம்!

author img

By

Published : Apr 12, 2023, 10:54 PM IST

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தயாரித்தல், விற்றல் மற்றும் விநியோகித்தல் ஆகியவை குற்றம் என தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை உபயோகிப்பது குற்றம்
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை உபயோகிப்பது குற்றம்

சென்னை: தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்கை தயாரிப்பதோ, விற்பனை செய்வதோ மற்றும் விநியோகிப்பதோ தமிழக அரசின் தடை அறிவிப்பை மீறும் குற்ற செயல் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) இணைந்து அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையினை செயல்படுத்தி வருகிறது.

இவற்றில் பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் நெய்யப்படாத கைப்பைகளின் தடையினை அளவு மற்றும் தடிமன் வரையறையின்றி தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது. தடை செய்யப்பட்ட பாலி எதிலீன் டெரிப்தாலேட், உயர் அடர்த்தி பாலி எதிலீன், வினைல், குறைந்த அடர்த்தி பாலி எதிலீன், பாலிப்ரோப்பிலீன், பாலிஸ்டைரீன் ரெசின்கள் போன்ற அதிக மூலக்கூறு எடை கொண்ட பாலிமரில் இருந்து தயாரிக்கப்பட்டு சுயமாக எடுத்துச் செல்லும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகளை உபயோகிப்பதற்கும், கையாள்வதற்கும் கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை உபயோகிப்பது குற்றம்
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை உபயோகிப்பது குற்றம்

மேலும் தற்போது, 'நெய்யப்பட்ட பைகள்' அல்லது 'ரஃபியன் பைகள்' என்ற பெயரில் பிளாஸ்டிக் கைப்பைகளை விற்பனையாளர்கள் கடைக்காரர்கள் மற்றும் ஜவுளி கடைகள், பெரிய கடைகள், ஷாப்பிங் மால்கள் போன்ற வணிக நிறுவனங்களிலும் பூ, உணவு, காய்கறிகள், மளிகைப் பொருட்கள், ஜவுளி முதலியவைகளை விநியோகிக்க உபயோகிக்கப்படுகின்றது. இதுபோன்ற ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு பிறகு தூக்கி எறியப்பட்டு குப்பையாக மாறி விடுகிறது.

இவ்வாறு குப்பையாக வீசப்பட்ட பிளாஸ்டிக்குகள் ஏரிகள், ஆறுகள், கடல் போன்ற நீர்நிலைகள் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. இதுபோன்ற தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தயாரிப்பதோ, விற்பனை செய்வதோ அல்லது விநியோகிப்பதோ தமிழக அரசின் தடை அறிவிப்பை மீறும் குற்றச் செயலாகும்.

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கு, தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட தடையை செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை, குறிப்பாக பிளாஸ்டிக் கைப்பைகளை எந்த நிலையிலும் பயன்படுத்துவதைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் தேவை என்பதனை தமிழக அரசு வலியுறுத்துகிறது.

நமது பூவுலகம் எதிர்கொள்ளும் பெரும் அச்சுறுத்தலை அகற்றுவதற்கு பொறுப்புள்ள குடிமகனாக, இத்தமிழ் புத்தாண்டில் "ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்" மற்றும் "சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துவோம்" என உறுதிமொழி மேற்கொள்வதோடு, அதை உறுதியுடன் பின்பற்றுவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்படுகிறது” என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு: விவசாயிகள் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.