ETV Bharat / state

சென்னையில் மீன்கள் கண்காட்சி, மீன் உணவுத் திருவிழா - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

author img

By

Published : Apr 6, 2023, 7:29 AM IST

கடலில் மீன் பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 350 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், மீனவர்களின் இயற்கை மரணத்திற்கான நிவாரணத் தொகை 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

fish
சென்னை

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை(ஏப்.5) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:-

  • கடலில் மீன் பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 250 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டில் உள்ள பத்தாயிரம் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு 75 விழுக்காடு மானியத்தில் 40 ஆயிரம் உயிர் காப்பு சட்டைகள், நான்கு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
  • நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான்பேட்டையில் 40 கோடி ரூபாய் செலவில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.
  • ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், மேற்கு வாடி மற்றும் ரோஸ்மா நகர் ஆகிய மீன் இறங்குதளங்கள் 45 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவுகளுடன் மேம்படுத்தப்படும்.
  • திருவள்ளூர் மாவட்டம் நொச்சிக்குப்பம், திருவாரூர் மாவட்டம் முணங்காடு மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆகிய மூன்று மீனவ கிராமங்களில் 23 கோடி செலவில் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.
  • கன்னியாகுமரி மாவட்டம், அன்னை நகர் மீன் இறங்கு தளத்தினை தூண்டில் வளைவுகளுடன் மேம்படுத்துதல் மற்றும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் தூர்வாருதல் ஆகிய பணிகள் மொத்தம் 25 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
  • திண்டுக்கல் மாவட்டம் மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமை மூலம் 80 லட்சம் ரூபாய் செலவில் நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.
  • சென்னை மாதவரம் பகுதியில் உள்ள மணலி மற்றும் மாத்தூர் ஏரிகளை சீரமைத்து பொழுதுபோக்கு மீன் பிடிப்புடன் கூடிய சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் 10 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
  • சென்னையில் வண்ண மீன்கள் கண்காட்சி மற்றும் மீன் உணவு திருவிழா 50 லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்.
  • மீனவர்களின் இயற்கை மரணத்திற்கான நிவாரணத் தொகை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத்துறையின் முக்கிய அறிவிப்புகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.