ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட் 2022 - முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

author img

By

Published : Jul 22, 2022, 7:02 PM IST

44ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 22) தலைமைச் செயலகத்தில், மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் வருகை குறித்த விவரங்கள், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்குமிட வசதிகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள், அழைக்கப்படும் முக்கிய அழைப்பாளர்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், செஸ் ஒலிம்பியாட் தீபம் உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மேலும், சென்னை விமான நிலையத்தில் விளையாட்டு வீரர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு வரும் வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர், அதுகுறித்த விவரங்களை முதலமைச்சரிடம் எடுத்துரைத்தார். 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கம், போட்டிகள் நடைபெறும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து சுற்றுசூழல்-காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் எடுத்துரைத்தார்.

சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகள், Hop-on-Hop-off பேருந்து வசதிகள் உள்ளிட்டவை குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் விளக்கினார். அதுமட்டுமின்றி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஜூலை 28ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இச்சதுரங்கப் போட்டி குறித்து உலகெங்கும் உள்ள சதுரங்க ஆர்வலர்கள், போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தகவல்கள் பெறும் வகையில் பிரத்யேகமாக ஒரு இணையதளமும், செயலியும் உருவாக்கப்பட்டு வரும் விவரங்கள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை சிறப்பாக நடத்திடும் வகையில், பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தரும் போட்டியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் எவ்வித குறைபாடுமின்றி மேற்கொள்ள வேண்டுமென்றும், போட்டி நடைபெறும் மாமல்லபுரத்திற்கு தேவையான போக்குவரத்து வசதியும், பார்வையாளர்கள் எவ்வித சிரமமின்றி போட்டியினை காண்பதற்கு தேவையான வசதிகளையும் செய்திட வேண்டுமென்று அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: ரயில்வேக்கு ரூ.12 ஆயிரம் கோடி அளவில் கடன் - ரயில்வே துறை அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.