ETV Bharat / state

"ஆளுநரின் அத்துமீறலுக்கு எதிரான அறப்போரில் வெற்றி பெறுவோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

author img

By

Published : Apr 18, 2023, 9:32 PM IST

மாநில அரசுகள் நிறைவேற்றிய சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்களுக்குக் கால நிர்ணயம் செய்வது தொடர்பாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எழுதிய பதில் கடிதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: மாநில அரசுகளால் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்குக் கால நிர்ணயம் செய்வது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் எழுதிய பதில் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில், 'எனது கடிதத்திற்கு உடனடியாகப் பதிலளித்து முழு ஆதரவு அளித்தமைக்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி. மாநில சுயாட்சியை பறிக்கும் எந்த முயற்சிக்கும் எதிராக தமிழ்நாடும், கேரளாவும் பாரம்பரியமான அரணாக இருந்து வருகின்றன. ஆளுநரின் அத்துமீறலுக்கு எதிரான அறப்போரிலும் வெற்றி பெறுவோம்' என்று தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகளால் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்குக் கால நிர்ணயம் செய்வது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், இது தொடர்பான முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதில் கடிதம் எழுதியிருந்தார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 11.4.2023அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளைத் தாம் முழுமையாக ஆதரிப்பதாகவும், அவை கேரளத்தில் நாங்கள் எடுத்த நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் அவர்கள் காலதாமதம் செய்வது குறித்து பொதுமக்கள் ஜனநாயக முறையில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தபோது, கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த ஆதரவைத் தாம் நினைவுகூர்வதாக கேரள முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருப்பதைப் போல, தற்போது பல மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இதுபோன்ற பிரச்னையை எதிர்கொள்வதாகவும், கேரளாவிலும், மாநில சட்டப்பேரவையில் உரிய விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட சில சட்டமுன்வடிவுகள் ஆளுநரால் நீண்ட காலமாகவும், அவற்றில் சில ஓராண்டிற்கு மேலாகவும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள கேரள மாநில முதலமைச்சர், கேரள மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று, கேரள ஆளுநர் கேட்ட விளக்கங்களை அளித்தும் சட்டமுன்வடிவுகள் இவ்வாறு நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வாக்களித்த மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் மாநிலச் சட்டமன்றங்கள் நிறைவேற்றும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல், அவற்றை நீண்டகாலம் நிலுவையில் வைப்பது என்பது, மக்களின் ஜனநாயக உரிமைகளை நிராகரிப்பதற்குச் சமமானது என்று கேரள முதலமைச்சர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், காலதாமதம் செய்வதன் வாயிலாக, மாநில அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற நாடாளுமன்ற ஜனநாயக மரபு மீறப்படுகிறது என்றும், அரசியலமைப்பில் ஆளுநருக்கு வரையறுக்கப்பட்டுள்ள விருப்புரிமை, குறுகிய வரம்புகளுக்குள் செயல்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் அரசியலமைப்பை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரால் ஒப்புக்கொள்ளப்பட்டபடி, 356-வது பிரிவைப் பயன்படுத்துவதும் ஒரு காலாவதியான கடிதமாக (dead letter) இருக்கவேண்டும் என்று கூறியுள்ளதைத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டமன்றங்களில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள மாநில அரசுகளை அகற்றுவதற்கு சட்டப்பிரிவு 356 மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது (பல முறை தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது) என்று குறிப்பிட்டுள்ள கேரள முதலமைச்சர், அதற்கு எடுத்துக்காட்டுகளாக 1959-ல் கேரளாவில் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசும், 1976 மற்றும் 1991-ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மு.கருணாநிதி அவர்களது தலைமையிலான தி.மு.க. அரசும் கலைக்கப்பட்ட நிகழ்வுகளைத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்குத் தடை ஏற்படுத்துவதைத் தடுத்து நிறுத்திட மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் நமது அரசியலமைப்பில் உள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் பாதுகாவலர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கால அவகாசம் அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும்,

அது நியாயமானதாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள கேரள முதலமைச்சர் பல மாநிலங்களின் அனுபவத்தின் அடிப்படையில், அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி எம்.என்.வெங்கடாசலய்யா ஆணையமும், ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி எம்.எம்.புஞ்சி ஆணையமும், சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய காலவரம்பைப் பிரிவு 200-ல் குறிப்பிடப் பரிந்துரைத்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ள பிரச்னையில், தாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், இந்த முன்மொழிவை மிகவும் தீவிரமாகப் பரிசீலிப்பதாகவும் கேரள முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிறப்பு நிதி ஒதுக்கி நீர் வழிப்பகுதிகளை சரிசெய்யாவிட்டால் குமரியை காப்பாற்ற முடியாது - அமைச்சர் துரைமுருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.