ETV Bharat / state

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சிஇஓ கிருஷ்ணன் திடீர் ராஜினாமா..! காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 6:46 AM IST

TMB Bank CEO Krishnan resigned: கார் ஓட்டுநர் வங்கி கணக்கிற்கு ரூ.9,000 கோடி அனுப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சிஇஓ எஸ்.கிருஷ்ணன் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

TMB Bank CEO Krishnan has resigned
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சிஇஓ எஸ்.கிருஷ்ணன் திடீர் ராஜினாமா

சென்னை: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த நெய்க்காகப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் சென்னை கோடம்பாக்கத்தில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மாலை 3 மணி அளவில் காரில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் இருந்து ரூ.9,000 கோடி டெபாசிட் ஆனதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பின் தனது வங்கிக் கணக்கில் வெறும் 15 ரூபாய் இருக்கும் நிலையில் யாரோ தன்னை ஏமாற்ற முயல்கிறார்கள் என நினைத்துள்ளார். இதனை அடுத்து தனது வங்கிக் கணக்கில் இருந்து தனது நண்பருக்கு ரூ.21,000 அனுப்பிய பிறகு 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தன் வங்கிக் கணக்கிற்கு வந்ததை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இந்த நிலையில் நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் பகிர்ந்த உடனேயே மீதமுள்ள பணம் அனைத்தையும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் இருக்கும் தூத்துக்குடியில் இருந்து ராஜ்குமாருக்கு தொலைப்பேசி மூலம் அழைத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதில் இருந்து பகிரப்பட்ட பணத்தைச் செலவு செய்ய வேண்டாம் என வங்கி நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனை அடுத்து நிர்வாகம் தரப்பில் ராஜ்குமாரை திடீரென மிரட்ட ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கிளைக்கு வங்கி தரப்பில் இருந்தும் டிரைவர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, 9000 கோடி ரூபாய் பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட ரூ.21,000 பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும், அதற்குப் பதிலாக வாகன கடன் வழங்குவதாக வங்கி தரப்பில் இருந்து சமரசம் பேசி அனுப்பி வைத்ததாக டிரைவர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் இதுகுறித்து ராஜ்குமார், அந்தப் பணம் யாருடைய பணம் எதற்காக எனது வங்கிக் கணக்கில் அனுப்பப்பட்டது எனது வங்கிக் கணக்கை அவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மீது சைபர் கிரைம் போலீசார் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சிஇஓ எஸ்.கிருஷ்ணன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் ராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலக்குவதாக தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் நிலையில் கிருஷ்ணனின் ராஜினாமா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் சித்தார்த்தை சூழ்ந்த கன்னட அமைப்பினர்.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.