ETV Bharat / state

பசி பட்டினி இல்லா தமிழ்நாடு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

author img

By

Published : Nov 21, 2022, 1:52 PM IST

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி மற்றும் கோதுமை வழங்குவதால் பசி பட்டினி இல்லா தமிழ்நாடு உருவாகியிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க, மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, மாநில முதலமைச்சர்களை தலைவராக கொண்டு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் இரண்டாவது குழு கூட்டம், தலைமை செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் நிதியோடு செயல்படுத்தப்படும் தற்போதைய திட்டங்களின் நிலை, நிதி செலவுகள், எத்தனை திட்டங்கள் நிறைவேற்றபட்டுள்ளது, அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஐந்து முதன்மை குறிக்கோள்களை கொண்டு செயல்படும் திட்டங்கள் தொடர்பாக கூட்டத்தில் முதலமைச்சர் பேசினார். அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பகுதி மேம்பாட்டு திட்டம் தொகுதி நிதி தொடர்பாகவும், தேசிய நல்வாழ்வு குழுமம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், பிரதமர் முன்னோடி கிராமத் திட்டம், திட்டங்களின் நிலையை தொடர்ந்து பார்த்து வருவதாக தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் 3,471 பணிகளில் 3,043 பணிகள் நிறைவடைந்து, 428 பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதேபோல் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் 1,015 பணிகளில் 570 பணிகள் முன்னேற்றத்தில் இருப்பதாகவும் கூறினார்.

விரைந்து மீதமுள்ள அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய வேண்டுமென கூறிய முதலமைச்சர், தேசிய குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் 54,439 அங்கன்வாடி மைய்யங்கள் மூலம் 27 லட்சத்து 774 குழந்தைகள் பயனடைந்து வருவதாகவும், 7 லட்சத்து 51 ஆயிரத்து 673 கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் சிறப்பாக பயனடைந்து வருகின்றனர் என்றார்.

உட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்குவதாகவும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் மூலம் ரேஷன் அடைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை இலவசமாக தமிழ்நாட்டில் வழங்கப்படுவதால் பசி, பட்டினி இல்லாத இலக்கை தமிழ்நாடு எட்டியதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

திட்டங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு, ஒவ்வொரு விதத்தில் உதவி புரியும். இவை அனைத்தையும் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும் என்றும் ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சிகளில் சமமான வளர்ச்சியே சமூக நீதி, சமத்துவத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருந்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க: மங்களூரு ஆட்டோ வெடிகுண்டு விவகாரம்.. இளைஞரிடம் போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.