ETV Bharat / state

பெரியகுளம் எம்.எல்.ஏ.வுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த வழக்கு... ராஜஸ்தானில் ஒருவர் கைது!

author img

By

Published : Jul 16, 2023, 11:01 PM IST

Updated : Jul 17, 2023, 9:33 AM IST

பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணகுமாருக்கு செல்போனில் ஆபாசமாக வீடியோ அனுப்பி 10ஆயிரம் ரூபாய் பணம் பறித்த வழக்கில், ராஜஸ்தானில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

MLA
MLA

பரத்பூர் (ராஜஸ்தான்): தேனி மாவட்டம், பெரியகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு ஆபாசமாக வீடியோ அனுப்பி 10ஆயிரம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் ராஜஸ்தானில் தலைமறைவாக இருந்த நபரை தமிழக போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணக்குமாருக்கு கடந்த 1ஆம் தேதி வாட்ஸ்அப்பில் வீடியோ கால் வந்து உள்ளது. அந்த அழைப்பை அவர் எடுத்துப் பேசியபோது எதிரில் யாரும் இல்லாமல் சில வினாடிகளில் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து மதியம் மீண்டும் எம்.எல்.ஏ-வின் வாட்ஸ்அப்பிற்கு ஒரு வீடியோவை, மர்ம கும்பல் அனுப்பியது.

அதில் முன்பு வந்த வீடியோ கால் அழைப்பிலிருந்த எம்எல்ஏ-வின் முகத்தை பதிவு செய்து, ஒரு பெண் நிர்வாணத்துடன் இருப்பது போலவும், தகாத முறையில் எம்எல்ஏ-விடம் பேசுவது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. பின் சட்டமன்ற உறுப்பினரிடம் பணம் கேட்டு மிரட்டிய மர்ம கும்பல், பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியது.

இதனையடுத்து எம்எல்ஏ ஐந்தாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்துள்ளார். பின்னர் மீண்டும் கடந்த 8ஆம் தேதி, மர்ம கும்பல் காணொலியை வைத்து மிரட்டியதும் மேலும் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த மர்ம கும்பல் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்ததால், இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தேனி சைபர் கிரைம் (cyber crime) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, எம்எல்ஏ சரவணக்குமாருக்கு, வீடியோ கால் வந்த தொலைபேசி எண், மர்ம கும்பலுக்குப் பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்கு போன்றவற்றைக் கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். எம்எல்ஏவை மிரட்டிய கும்பலின் தொலைபேசி எண்ணை வைத்து அந்த மர்ம கும்பல் ராஜஸ்தானில் இருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர்.

ராஜஸ்தான் விரைந்த தமிழக போலீசார், உள்ளூர் போலீசார் உதவியுடன் மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் அர்ஷத் என்றும்; அல்வார் அடுத்த கோவிந்த்கர்க் பகுதியில் வசித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். ஏடிஎம் மோசடியில் ஈடுபட்டு வந்த அர்ஷன், தற்போது ஆபாச வீடியோக்களை உருவாக்கி அதை சம்மந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பி பணம் பறித்து வந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.

அர்ஷத் கைது செய்யப்பட்ட நிலையில், அதேபோல் ஆபாச வீடியோக்களை அனுப்பி பணம் பறித்து வந்ததாக இரண்டு சிறார்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அர்ஷத்தை மேல் விசாரணைக்காக தமிழகம் அழைத்து வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : Bengaluru Opposition meeting : திமுக, காங்கிரஸ் உள்பட 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்பு - தகவல்!

Last Updated : Jul 17, 2023, 9:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.