ETV Bharat / state

பெண்களின் புகைப்படங்களை ஆன்லைனில் விற்பனை செய்த இளைஞர் கைது.. எச்சரிக்கை விடும் காவல் துறை!

author img

By

Published : Jul 15, 2023, 3:56 PM IST

பொது இடங்களுக்குச் செல்லும் பெண்களை தகாத வகையில் புகைப்படம் எடுத்து டெலிகிராமில் விற்பனை செய்துவந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரை சென்னை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் பெண்களை குறிவைத்து ஆபாசமாக புகைப்படம் எடுக்கும் கும்பலைச் சேர்ந்த ஐடி பட்டதாரி இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அரைநிர்வாணம் புகைப்படத்தின் விலை 50 ரூபாய், முழு நிர்வாண புகைப்படத்தின் விலை 100 ரூபாய், வீடியோக்கள் ஆயிரம் ரூபாய் என சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்கள் விற்பனை செய்து வந்துள்ளார். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வைத்திருந்தது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 21வயது இளம்பெண் ஒருவர், சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது புகைப்படத்தை சிலர் ஆபாசமாக சித்தரித்து டெலிகிராமில் பணத்திற்கு விற்பனை செய்வதாக தனது நண்பர் ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாகவும், அந்த புகைப்படத்தை தனது நண்பர் மூலமாக 47 ரூபாய்க்கு வாங்கி பார்த்தபோது, கடந்த 2022ஆம் ஆண்டு தீபாவளிக்காக பிரபல ஷாப்பிங் மாலிற்குச் சென்று துணி எடுத்தபோது தனக்கு தெரியாமல் எடுத்த புகைப்படம் என்பது தெரியவந்தது.

இதனால், தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் துறையினர் பணம் செலுத்திய வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்தினர். அதில், பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கின் உரிமையாளர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆர்யா (22) என்பது தெரியவந்தது. உடனடியாக ஈரோடு விரைந்த சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் துறையினர் அந்த இளைஞரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆர்யா கல்லூரியில் ஐடி பி.டெக் படிப்பை முடித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், இளைஞர் ஆர்யாவிடம் சைபர் கிரைம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான துணிக்கடை, பிரபல மால்கள், திரையரங்குகள், மார்க்கெட் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுப்பதை ஆர்யா வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

குறிப்பாக பெண்களின் துணி விலகிய நேரத்திலும், மாடர்ன் உடையில் வரும் பெண்களை ஆபாசமாகவும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து வந்துள்ளார். பின்னர், அந்த பெண்களின் புகைப்படங்களை செயலி (App) மூலமாக ஆபாசமாக சித்தரித்து, டெலிகிராம் மூலமாக ஆர்யா விற்பனை செய்து வந்துள்ளார். குறிப்பாக டெலிகிராமில் zip பைல் மூலமாக ஒரு புகைப்படத்தின் விலை 50 ரூபாய் எனவும் நிர்வாண புகைப்படத்தின் விலை 100 ரூபாய் எனவும் ஆபாச வீடியோக்கள் 1000 ரூபாய் என விற்பனை செய்து வந்துள்ளார்.

ஆர்யா தனியாக பல டெலிகிராம் சேனலை தொடங்கி அதில் பொது இடங்களில் எடுக்கும் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து விலையை நிர்ணயித்து விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த 3 மாதங்களில் மட்டும் பொதுஇடங்களில் எடுத்த பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து 4 லட்சம் ரூபாய்க்கு டெலிகிராமில் விற்பனை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக கரோனா காலக்கட்டத்தின்போது பெற்றோரை பிரிந்து தாத்தா, பாட்டி வீட்டிற்குச் சென்று தங்கியதால் அங்கு தனிமையில் இருந்து வந்ததாகவும், மேலும் அதிகப்படியான நண்பர்கள் இல்லாததால் செல்போனில் மூழ்கியுள்ளார்.

அப்போது அதிகப்படியான ஆபாச படங்களை பார்த்த போது, அதில் பொது இடங்களில் ஆபாசமாக சித்தரித்து பெண்களின் புகைப்படங்களை விற்பனை செய்வோர் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர் ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள பிரபல மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், திரையரங்குகள் ஆகியவற்றிற்கு வரும் பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து தரும்படி தெரிவித்ததாகவும், அதிகப்படியான பணம் கிடைக்கும் என்ற ஆசையில் இதில் இறங்கியதாகவும் ஆர்யா வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் பிறகு பெண்களின் புகைப்படத்தை விற்பனை செய்து அதன் மூலமாக பணத்தை கிப்ட் வவுச்சர்களாக மாற்றி முக்கிய நபருக்கு அனுப்பி வந்ததாகவும் ஆர்யா தெரிவித்துள்ளார். பெண்களின் ஆபாச புகைப்படங்கள் விற்பது மூலம் அதிகப்படியான தொகை வந்ததால் பின்னர் தானே டெலிகிராம் சேனல் தொடங்கி ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் விற்பனை செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதே போல தமிழ்நாட்டில் பல இளைஞர்கள் பொது இடங்களில் பெண்களின் புகைப்படங்களை எடுத்து ஆர்யாவிற்கு அனுப்பி வருவதையும் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலமாக சம்பாதித்த பணத்தில் விலை உயர்ந்த செல்போன், சுற்றுலா, சொகுசு வாழ்க்கை என ஆர்யா வாழ்ந்து வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவன் ஆர்யாவிடமிருந்து செல்போன், மடிக்கணினி, வங்கிக் கணக்கு அட்டைகள் மற்றும் 3ஆயிரத்து 600 பெண்களின் ஆபாசமாக சித்தரித்த புகைப்படங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுமட்டுமின்றி ஆர்யாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2டிபி ஹார்டிஸ்குகளில் லட்சக்கணக்கான பெண்களின் புகைப்படங்களும் காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள ஆர்யாவை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், தமிழ்நாட்டில் பொது இடங்களில் பெண்களின் புகைப்படங்களை எடுத்து ஆர்யாவிற்கு அனுப்பும் நபர்களையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களை விரைவில் கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இணையதளங்கள் வாயிலாகவும் சமூக வலைத்தளங்களிலும் புகைப்படங்களை பெண்கள் பகிரும் பொழுது மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும் பொது இடங்களில் பெண்களை தவறாக புகைப்படம் எடுக்கும் அந்நியவர்களை கண்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ, அவசர எண் 100க்கோ தகவல் அளிக்குமாறு தெற்கு மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதே போல சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழகுவதை தவிர்க்குமாறும், தேவையின்றி புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களையோ பகிர வேண்டாம் எனவும் தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் துறையினர், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பொது இடங்களில் பெண்கள் உஷார்.. ஆபாசமாக போட்டோ எடுத்து ஆன்லைனில் விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.