ETV Bharat / state

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: மத்திய வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்...

author img

By

Published : Nov 29, 2022, 7:31 AM IST

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த நவம்பர் 28 அன்று 23 மீனவர்களும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும், நடப்பாண்டில் மட்டும் 221 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவ சமூகத்தினரிடையே கடுமையான மன அழுத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், ஏற்கனவே நெருக்கடியான பொருளாதாரத்தை எதிர்கொண்டிருக்கும் மீனவ சமுதாயத்திற்கு நமது ஆதரவு தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டின் 105 மீன்பிடிப் படகுகள் தற்போது இலங்கை வசம் உள்ளதாகவும், தொடர் முயற்சிகளின் காரணமாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் இன்னும் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தேவையான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீபத்திருவிழா: இரண்டாம் நாள் இரவு சாமி ஊர்வலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.