ETV Bharat / state

டோக்கியோ - சென்னை விமான சேவையை மீண்டும் தொடங்குக: மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

author img

By

Published : May 31, 2023, 2:19 PM IST

டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தவும், சிங்கப்பூர்-மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும் முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர்ராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

TN CM Stalin letter to civil aviation minister about tokyo chennai direct flight service
டோக்கியோ- சென்னை நேரடி விமான சேவை மீண்டும் அறிமுகம்- விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், டோக்கியோ-சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் இயக்குவது மற்றும் சிங்கப்பூர்-மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர்ராதித்ய சிந்தியாவுக்கு இன்று (31-5-2023) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது, தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், 2024 ஜனவரியில் தமிழ்நாடு அரசு நடத்த உத்தேசித்துள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தொழில் முதலீட்டாளர்களை அழைப்பதற்காகவும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வெற்றிகரமாக சுற்றுப்பயணத்தை தாம் மேற்கொண்டுள்ளதைக் குறிப்பிட்டு, தனது பயணத்தின் போது, அரசு மற்றும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களை, குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைச் சந்தித்ததை குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில், நிசான், தோஷிபா, யமஹா, கோமேட்ஸு, மிட்சுபிஷி, ஹிட்டாச்சி போன்ற பல ஜப்பானிய பெருநிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளதையும், ஜப்பான்-இந்தியா முதலீட்டு ஊக்குவிப்பு கூட்டாண்மைத் திட்டத்தின்கீழ், இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரங்களில், மூன்று தமிழ்நாட்டில் உள்ளது.

தமிழ்நாட்டில் 600-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், கடந்த இருபதாண்டுகளில் ஜப்பான் நாட்டினரின் வருகை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், இந்தியாவில், ஜப்பானிய சமூகத்தின் மிகப்பெரிய தாயகமாக சென்னை திகழ்வதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதோடு, ஜப்பானில் கணிசமான புலம்பெயர்ந்த தமிழர்கள் உள்ளதையும், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி தொடர்பான துறைகளில் அவர்கள் வல்லுநர்களாக உள்ளனர், இதன் விளைவாக, தமிழகத்திற்கும் ஜப்பானுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருவதுடன், சுற்றுலா வடிவிலும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகள் வளர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சென்னைக்கும், டோக்கியோவுக்கும் இடையே நேரடி விமான சேவை இல்லை என்றும், 2019 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸ் (ANA) சென்னை மற்றும் டோக்கியோ இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியதாகவும், கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் இது நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

நேரடி விமான இணைப்பு இல்லாததால், சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையிலான பயண நேரம் சுமார் 7 மணி நேரம் இரட்டிப்பாகியுள்ளதாகவும், சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள ஜப்பானிய தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.

2024 ஜனவரி மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, தமிழ்நாடு நடத்தவுள்ள நிலையில், ஜப்பானிலிருந்து அதிக முதலீடுகளை ஈர்த்திட ஏதுவாக, நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவது உண்மையில் வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு, சென்னைக்கும், டோக்கியோவுக்கும் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டு உள்ளார்.

அதேபோல், சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 4 இலட்சம் பேர் கணிசமான அளவில் வசித்து வருவதாகவும், அவர்கள் இன்னும் தமிழ்நாட்டில் தங்கள் சொந்த நகரங்கள் மற்றும் கிராமங்களில், முக்கியமாக தென் தமிழ்நாட்டில் தொடர்புகளைக் கொண்டுள்ளதாகவும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து பலர் சிங்கப்பூருக்கு வேலைக்காக செல்கின்றனர். சிங்கப்பூருக்கும், சென்னைக்கும், திருச்சிக்கும் இடையே தினசரி விமான சேவையும், சிங்கப்பூருக்கும், கோயம்புத்தூருக்கும் இடையே தினசரி ஒரு விமானமும் இயக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே விமானச் சேவை உள்ளது என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே அதிக விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்ற பிரச்சினையை சிங்கப்பூர் அரசின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் தன்னைச் சந்தித்தபோது எழுப்பியதாகவும், இதேபோன்ற கோரிக்கையை சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் பலரும் முன்வைத்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டு, சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையில் அதிக விமானங்களை இயக்கிட அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சாதகமாக பரிசீலித்திட ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான இணைப்பை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் மற்றும் சிங்கப்பூர்-மதுரை இடையே விமானங்களின் எண்ணிக்கையை, குறைந்தபட்சம் ஒரு தினசரி விமானமாக அதிகரிக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை தான் மீண்டும் வலியுறுத்துவதாகவும், இவற்றை முன்னுரிமை அடிப்படையில், ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர்ராதித்ய சிந்தியா அவர்கள் பரிசீலித்திட வேண்டுமென்று கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: தவறாக வழிநடத்தும் மீடியாக்களுக்கு செக்.. ட்விட்டரில் வருகிறது புதிய அம்சம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.